நுவரெலியா மாவட்டத்தில் லைக்கா ஞானம் பவுண்டேசன்..!!

“பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது” எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை அமைப்பான ஞானம் பவுண்டேஷன், நுவரெலியா மாவட்டத்தில் அதன் முதல் சமூக அபிவிருத்தி திட்ட பணியை நேற்று (27) ஆரம்பித்தது.

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலக ‘அதிசய’ மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட கலந்து சிறப்பித்தார்.

லைக்கா – ஞானம் பவுண்டேஷனின் சர்வதேச இணைப்பதிகாரி சைத்தனியா, மாவட்ட செயல் திட்ட முகாமையாளர் ஆர். ஸ்ரீதரன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி திட்ட இணைப்பதிகாரி எம்.என்.யூசுப் ஆகியோருடன் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்,யுவதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வரும் லைக்கா, ஞானம் பவுண்டேஷன் இலங்கையில் வடக்கு,கிழக்கு பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய சமூக அபிவிருத்தி பணியினை அரச சார்பற்ற நிறுவனமாக முன்னெடுத்துவருகின்றது.

இந்நிலையில் மலையக சமூகத்திற்கும் அபிவிருத்தி தேவைப்பாடுகள் உள்ளமையால் நுவரெலியா மாவட்ட செயலாளரின் அழைப்புக்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் முதன் முறையாக “லைக்கா,ஞானம் பவுண்டேஷன்” முன்னெடுக்கப்படவுள்ள சமூக அபிவிருத்தி பணியை அங்குரார்பணம் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனூடாக கல்வி, வாழ்வாதாரம், குடியிருப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் தொழில் வாய்ப்பு வசதிகள் என சமூக தேவைப்பாடு உணர்ந்து அதற்கான அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட செயற் திட்ட முகாமையாளர் ஆர்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *