முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவில் இன்று காலை காலமானார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியது.
ஆனால், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
கோமநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சாந்தன் மரணம் அடைந்தார்
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்!
சாந்தன் உடல் நலக்குறைவால் இன்றுகாலை காலமானார். இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தனின் உயிா் பிரிந்திருக்கின்றது.
சாந்தன் இலங்கை வருவதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது.
அதன் பின்னா் சில ஆவணங்கள் தேவையாக இருந்ததால் அவரது பயணம் தாமதமாகியது. இன்றிரவு புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அவா் மரணமானாா்.
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் குடிவரவு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தாா்.
அங்கிருந்து அவரை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையால்தான் தனது தாயாரை பாா்க்க வேண்டும் என்ற 35 வருடகால கனவு நனவாகாமல் போய்விட்டது.