- சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு தனியான கடன் திட்டம் – அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ.
அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டம் தொடர்பான திருத்தத்தை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்க்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு (Small and Midsize Enterprise) தனியான கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,
“நாடு ஒரு நிதிக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் பொருளாதாரமும் வலுவாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு கணிசமான அதிகாரம் உள்ளது. கடந்த காலத்தில் இலங்கையில் கருத்தாடலுக்கு உட்பட்ட பரேட்டா சட்டம் பற்றி குறிப்பிடுவதென்றால், இவ்விடயத்தில் மத்திய வங்கி, நிதி நிறுவனங்களின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் மாத்திரமே கவனம் செலுத்தியது.
நாட்டின் கையிருப்பு நிலை குறித்து மத்திய வங்கி கவனம் செலுத்தியதா என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர். மேலும், விவசாயத் துறை 22% – 8% வரையிலும், தொழில் துறை 38% – 32% வரையிலும் வீழ்ச்சியடைந்துள்ளமைக் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 17 முறை கடன் பெற வேண்டியிருந்தது. அவ்வாறு செய்தாலும் பொருளாதாரத்தை மீட்க முடியவில்லை. நாம் பொருளாதாரத்தில், சேவைத் துறையை தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளோம். தொழில் துறை மீது காட்டப்பட்ட அலட்சியத்தால், உற்பத்தித் திறன் குறைந்துள்ளது.
இரண்டு அரச வங்கிகளினால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட கடன் தொகை சுமார் 602 பில்லியன் ரூபாவாகும். அதில் பெரும்பகுதியை திருப்பிச் செலுத்த முடியாததால் அறிவிடமுடியாக் கடனாக தள்ளுபடி செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடன் தொகையை நம் நாட்டில் விவசாயம் மற்றும் தொழில் துறைகளில் பயன்படுத்த முடிந்திருந்தால், அந்தத் துறைகளில் பெரும் வளர்ச்சியை எட்ட முடிந்திருக்கும். நாட்டில் நிதிக் கட்டுப்பாடு இல்லாததால்தான் இத்தகைய நிலை ஏற்பட்டது.
இங்கு வர்த்தகர்களும், நிதி நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்காத வகையில் செயல்பட வேண்டும். அதன்படி, பரேட்டா சட்டத்தால் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக, பாராளுமன்றத்தில் சில திருத்தங்களை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு (Small and Midsize Enterprise) தனியான கடன் திட்டத்தையும் அறிமுகப்படுத்த உள்ளோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதே கருத்தையே கொண்டுள்ளார்.
மேலும், எமக்கு நிதியுதவி வழங்கும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இந்த குறைந்த வட்டியில் கடன் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். வங்கிகள் மூலம் மாத்திரம் கடன் வழங்கும் போது, கடன் பெறத் தகுதியுள்ளவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறதா என்ற பிரச்சினை எழுகிறது. எனவே, அமைச்சரவையுடன் கலந்துரையாடிய பின்னர், இந்த கடன் வசதியை வழங்குமபோது, கண்காணிப்பு முறைமையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தோம்.
மேலும் நிதியமைச்சுடன் இது தொடர்பில் கலந்துரையாடவும் நாம் எதிர்பார்க்கின்றோம்” என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.