கோவை மாவட்டம் பல்லடத்திற்கு இன்று மதியம் வருகை தரும் பிரதமர் மோடி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்து பங்கேற்கிறார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, அங்கிருந்து மதியம் 1.20 மணிக்கு இந்திய விமானப்படை விமானத்தில் கோவை சூலூர் புறப்படுகிறார். மதியம் 2 மணியளவில் கோவை சூலூர் வந்தடையும் பிரதமர், அங்கிருந்து மதியம் 2.10 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார். பல்லடம் அருகே மாதப்பூர் பகுதியில் இன்று மதியம் 2.45 முதல் 3.45 வரை என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பாஜக மாநாட்டிற்காக 1,100 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. உணவு விநியோகம் செய்யும் பகுதி, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு, தாமரை பூ வடிவில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 8.15 மணி அளவில் பசுமலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் புறப்படும் பிரதமர், 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி சென்றடைகிறார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், குலசேகரன்பட்டினத்தில், புதிதாக அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.10 மணிக்கு பிரதமர் மோடி திருநெல்வேலி செல்கிறார். பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே பெல் பள்ளி மைதானத்தில், பாரதிய ஜனதா சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார்.