நீதி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் நாடளாவிய ரீதியில் கிராம சேவகர் பிரிவுகளில் “சகவாழ்வு சங்கங்களை நிறுவி வருகின்றது. அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கான மாவட்ட மட்ட ஆலோசகர் சபை அமைக்கும் நிகழ்வும், அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் (24) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்.
இதன்போது கிராம மட்டங்களில் அமைக்கப்படும் சகவாழ்வு சங்கங்கள் தொடர்பாகவும் மாவட்ட மட்ட ஆலோசகர் சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றியும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் ஆலோசகர் சபை உறுப்பினர்களாக மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 17 உறுப்பினர்களுக்கு இரண்டு வருடங்களுக்கான நியமன சான்றிதழ்கள் அமைச்சரின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மாவட்ட மட்ட ஆலோசகர் சபையில் மதத் தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
இதன்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நீதி.இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, நீதி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான தவிசாளர் சரித் மாரம்பே, பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.