இந்தியில் கேள்விகேட்ட நிருபர்.. அட்லி கொடுத்த நச் ரிப்ளை!

“பாலிவுட்டுக்கு வர எட்டாண்டுகள் ஆனது. இன்னும் மூன்று ஆண்டுகளில் ஹாலிவுட்டில் படம் பண்ணுவேன்” – இயக்குனர் அட்லி

வடமாநிலத்தவர்கள் இந்தியில் பேசுகையில், இந்தித் தெரிந்த தமிழர்கள் இந்தியில் பதிலளித்து வந்தார்கள். எப்போது, இந்தி தேசிய மொழி, அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்று இந்தியை இந்தியா முழுமைக்கும் திணிக்கும் அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போதே மொழி என்பது அரசியல் நடவடிக்கையாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் வடஇந்திய மேடைகளில் இந்தியில் பேசி வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தித் திணிப்பு அரசியல்மயமாக்கப்பட்ட பின் இந்தியை அவர்களது மேடையிலேயே தவிர்த்து வருகிறார்.

விருது வழங்கும் விழாவிலும் அவர் தமிழிலேயே விருதுக்குரியவர் பெயரை அறிவித்தார்.  இந்தியில் விழா தொகுப்பாளர் பேசிய போது, ‘என்ன இந்தியா..?’ என்று விலகி ஓடினார். சமீபத்தில் பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர், இந்தித் தெரியாம பாலிவுட்ல போய் படம் எடுப்பீங்களா..? என்று கேட்ட போது, பாக்யராஜ் தொடங்கி முருகதாஸ்வரை இந்தி தெரியாமல் இந்தி சினிமா இயக்கிய வரலாறை வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கினர்.

மணிரத்னம் மும்பையில் படித்தப் பின்பும் இந்தி கற்றுக் கொள்ளவில்லை. ‘அவர்தான் சீனியர் இந்தி தெரியாது போடா’ என்று டிவி நிகழ்ச்சி ஒன்றில் கமல் பேசினார்.

அட்லியும் மொழி அரசியலில் தமிழனாக தனது பங்களிப்பை செய்துள்ளார். சமீபத்தில் ஒரு மீடியா நடித்திய என்கிளேவில் அட்லி கலந்து கொண்டார். அது ஆங்கில மீடியா. அவரை பேட்டி கண்ட நிருபர், ஆங்கிலத்தில் வரவேற்று, பிறகு இந்தியில் கேள்விகளுக்குத்தாவ, ‘நான் நல்லாயிருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க’ என்று தமிழில் அட்லி பதிலளிக்க, அந்த அரசியலை புரிந்து கொண்ட நிருபர் சிரித்து மழுப்பியபடி பிறகு ஆங்கிலத்தில் கேள்வி கேட்கத் தொடங்கினார். இந்த பேட்டியின் போது, தென்னிந்தியாவில் ஏன் இந்திப் படங்களை பார்ப்பதில்லை என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அட்லி, “அது உண்மையில்லை. நாங்கள் ஷாருக்கான், சல்மான் கான், ஹிர்த்திக் எல்லோருடைய படங்களையும் பார்க்கிறோம். 3 இடியட்ஸ் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நல்ல கன்டென்ட் உள்ள படங்கள் வரும் போது மக்கள் அதனை பார்க்கிறார்கள். திரைப்படத்துறையில் இருப்பவனாக பான் – இந்தியா என்ற வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார். ஷாருக்கானை மீண்டும் இயக்குவீர்களா என்று கேட்டதற்கு, “ஜவானைவிட பெரிய படம் ஒன்றை உங்களுக்கு தருவேன். ஷாருக்கானிடம் கதை சொல்வேன், அவர் அதை விரும்பினால், கண்டிப்பாக அது நடக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *