ராஞ்சியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் என்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்தியா, துருவ் ஜுரலின் அபார ஆட்டத்தால் 307 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
46 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 192 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா நிதானமாக விளையாடியது. கேப்டன் ரோஹித் சர்மா 55 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
சீரான இடைவெளியில் விக்கெட்களை இங்கிலாந்து பவுலர்கள் வீழ்த்தினாலும் சுப்மன் கில் மற்றும் துருவ் நிலைத்து நின்று ஆடினார்கள். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. சுப்மன் கில் 52 ரன்கள் உடனும் துருவ் ஜோரல் 39 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.