இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 152 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122* ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸி விளையாடியது. இதில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். அறிமுக வீரர் துருவ் ஜூரெல் கடைசி வரை நின்று விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், தொடக்க வீரர் பென் டக்கெட் 15 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆலி போப் டக் அவுட்டில் வெளியேறினார்.
இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 351 விக்கெட்டுகள் கைப்பற்றி அணில் கும்ப்ளே சாதனையை (350 விக்கெட்டுகள்) முறியடித்தார். ஆலி போப்பிற்கு பிறகு வந்த ஜோ ரூட் 11 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஜானி பேர்ஸ்டோவ் 30 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த பின்வரிசை வீர்ரகள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இங்கிலாந்து அணியானது கடைசி 7 விக்கெட்டுகளை 35 ரன்களில் இழந்துள்ளது. இறுதியாக, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 2 ஆவது இன்னிங்ஸில் 145 ரன்கள் மட்டுமே எடுத்து 191 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின் 35ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அணில் கும்ப்ளேயின் சாதனையை சமன் செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தாமல் வெறும் ஸ்பின்னர்களை மட்டுமே பயன்படுத்தியது.
மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 8 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 24 ரன்னுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.