ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (UN FAO) பணிப்பாளர் நாயகம் கலாநிதி கூ தொங்யுவுக்கும் (Dr. Qu Dongyu இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்றது.
பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து இலங்கை மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை பாராட்டிய பணிப்பாளர் நாயகம், புதிய சீர்திருத்தங்களினூடாக நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான சமயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பு தொடர்ந்து பூரண ஆதரவை வழங்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதில் விவசாயம் முக்கிய துறையாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொழும்பகே ஆகியோரும் இணைந்து கொண்டனர்.