இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பந்து வீச்சால் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 319 ரன்கள் எடுத்தது.
126 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். குறிப்பாக துவக்க வீரர் ஜெயஸ்வால் மீண்டும் இரட்டை சதம் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சுப்பன் கில் 91 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
சர்பராஸ் கான் 68 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 214 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவின்சுழல் பந்தில், இங்கிலாந்து வீரர்கள் திணறியதோடு, விக்கெடுகளை இழந்தனர்.
இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிருந்தனர். இதனால் 122 ரண்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும், அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.