இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளுக்கான வாய்ப்புக்காக காத்திருந்த சரப்ராஸ் கான் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு டெஸ்ட் வீரருக்கான கேப் அனில் கும்ப்ளேவால் வழங்கப்பட்டது.
அப்போது மைதானத்துக்கு வந்திருந்த சர்பராஸ் கான் தந்தை நௌஷத் கான் அணிந்திருந்த டிஷர்ட்டில் வாசகம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அவரது டிஷர்ட் பின்புறத்தில் “கிரிக்கெட் ஜெண்டில்மேன்களின் விளையாட்டு அல்ல. அனைவருக்குமான விளையாட்டு’ என எழுதப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொருளாராத ரீதியில் பின்தங்கி இருந்த குடும்பத்தில் பிறந்த சர்பராஸ் கானை வளர்த்து ஆளாக்கி இந்திய அணிக்காக விளையாட வைத்துள்ள நௌஷத் கானுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் நௌஷத் கானுக்கு ஜீப் ஒன்றை பரிசளிக்க விரும்புவதாக மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் “நௌஷத் கான் இதைப் பெற்றுக்கொண்டால் அது எனக்கு பெருமையான விஷயமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.