நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இதற்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார். அப்போது சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக நடிகர் சங்க செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்கள் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உங்கள் பங்களிப்பிற்காகவும், முடிந்தவரை விரைவாக கட்டடம் கட்டும் பணிகளை முடிக்க உதவ முன்வந்ததற்காக அமைச்சர் உதயநிதிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் ஓர் அன்பான செயல். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.