தென்னாப்பிரிக்கா தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷான் மனச்சோர்வு என்று சொல்லி அந்த தொடரில் இருந்து விடுப்பு கேட்டு வெளியேறினார். அதன் பின்னர் தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் விளையாடவில்லை.
இஷான் கிஷான் மீண்டும் அணியில் இணைவது சம்மந்தமாக பேசிய பயிற்சியாளர் டிராவிட், “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியிருந்தார். இதன் மூலம் இப்போதைக்கு இஷான் கிஷான் மேல் தேர்வுக்குழுவினரின் பார்வை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் அவர் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை இப்போது தொடங்கியுள்ளார். இது பிசிசிஐக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு வீரர் இந்திய அணியின் பயிற்சியாளர் அறிவுரை இல்லாமல் இதுபோல தனியாக பயிற்சியில் ஈடுபடக் கூடாது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ இஷான் கிஷானின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அனைத்து வீரர்களையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட சொல்லி அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது.
இதுபற்றி பேசியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா “இஷான் கிஷான் இளம் வீரர். அவர் பெயரை குறிப்பிடத்தேவையில்லை. அது எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரும் கவனிக்கப்படுகிறார்கள். எல்லா வீரர்களுக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியுள்ளார்.