அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்த நிலையில் இந்த கோவிலின் சிறப்புகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
அபுதாபி அருகே அபு முரேகாவில் என்ற பகுதியில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்போதைய பட்டத்து இளவரசரும், தற்போதைய அதிபருமான பின் சயீத் அல் நஹ்யான், இந்த கோவிலுக்காக 27 ஏக்கர் நிலம் வழங்கினார்.
மத நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ள இந்த கோவிலுக்கு இஸ்லாமிய மன்னர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.
கோயிலைக் கட்டியவர் கத்தோலிக்க கிறிஸ்தவர், கட்டடத்தின் திட்ட மேலாளர் சீக்கியர், அடித்தள வடிவமைப்பாளர் புத்த மதத்தைச் சேர்ந்தவர். கட்டுமான நிறுவனம் ஒரு பார்சி குழு, நிறுவனத்தின் இயக்குனர் ஜைன பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் என்பதால் இந்த கோவிலில் அனைத்து மதத்தினர்களின் பங்கு உள்ளது.
இந்தக் கோயில், 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப்புற சுவரில் இந்து கடவுள்களின் உருவங்கள் வரையப்பட்டுள்ளது.
இந்த கோவிலின் எந்த இடத்திலும் ஒரு இரும்புக் கம்பி கூட பயன்படுத்தப்படவில்லை.
கோவிலில் 7 கோபுரங்கள் உள்ளது. அதில் ராமர், சிவன், ஜெகன்னாதர், கிருஷ்ணர், ஏழுமலையான் மற்றும் ஐயப்பன் சிலைகள் உள்ளன. ஏழு கோபுரங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களைக் குறிப்பதாக கூறப்படுகிறது.