இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீடு ஊடாக ஒருங்கிணைந்த கட்டண முறை எனப்படும் UPI ஊடாக பணம் செலுத்தும் முறைமையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று (12) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் இதில் இணைந்து கொண்டார்.
- இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் தனித்துவமான சந்தர்ப்பம்.
- இதன் மூலம் இந்நாட்டிலுள்ள 04 இலட்சம் வர்த்தகர்கள் பயனடைவர்.
- இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் “ தொலைநோக்கு அறிக்கை” தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி.
- இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
NNPCI International Payments Limited மற்றும் இலங்கை LankaPay நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை விரைவாக விஸ்தரிக்கும் நோக்கத்துடன் 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வசதியை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம், இந்த வர்த்தக நிலையங்ககளின் எண்ணிக்கை மார்ச் 2024க்குள் 65,000 ஆக உயர்த்தப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அண்மைய உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது வெளியிடப்பட்ட ” தொலைநோக்கு அறிக்கையின்” பிரகாரம் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த கொடுப்பனவு முறைமை (UPI) அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், LankaQR ஊடாக UPI பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ளுர் பரிவர்த்தனைகளுக்கு உகந்த முறையான LankaQR ஆனது QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது. அதன்படி, UPI- கைபேசி செயலியைப் தடையின்றி பயன்படுத்தி இலங்கை முழுவதும் உள்ள வணிகர் சமூகத்திற்கு கொடுப்பனவுகளை செலுத்த முடியும். மேலும் இந்த ஏற்பாடு நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்தும்.
மேலும், இலங்கையில் உள்ள சுமார் 20 உள்ளூர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு தங்கள் ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த வேலைத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் மும்பையுடன் இலங்கை இணைக்கப்படும் எனவும் இதன் மூலம் இலங்கையில் உள்ள சுமார் 400,000 வர்த்தகர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு மட்டுமன்றி இந்திய – இலங்கை பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு தனித்துவமான சந்தர்ப்பம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அண்மையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் தாம் வெளியிட்ட ” தொலைநோக்கு அறிக்கையை” தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மேலும், அண்மையில் பேர்த்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும், தொலைநோக்கு அறிக்கையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடைவதாகவும், மொரீஷியஸ் அரசுடனான ஒத்துழைப்பு மேலும் விரிவடையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை மற்றும் மொரிஷியஸை UPI கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கும் இலக்கை அடைவது பரஸ்பர நன்மைகளைப் பெறுவதற்கும் உள்ளூர் பொருளாதாரங்களின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும் ஒரு படியாகும் என்றார்.
ஆபிரிக்காவிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட Rupee அட்டையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிற்கு வருகை தரும் மொரிஷியஸ் சுற்றுலாப் பயணிகளின் வசதியை அதிகரிப்பதிலும், பண நோட்டுகள் மற்றும் நாணயங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் குறைப்பதிலும் அது வகிக்கும் பங்கை வலியுறுத்தினார்.
பூகோள தெற்கின் நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்தியப் பிரதமர், “அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்ற கொள்கையின்படி, அண்டை நாடுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இந்தியா ஆதரவளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த மூன்று நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,
பிரதமர் மோடி அவர்களே, இந்திய – இலங்கை உறவில் இது மற்றொரு முக்கியமான தருணமாக கருதுகிறேன். சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் ராமர் கோயிலை திறந்து வைத்தீர்கள். அதற்கு நான் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன். இந்தத் திட்டம் நமக்கு இடையேயான பொருளாதார மற்றும் கலாச்சார உறவை பிரதிபலிக்கிறது.
நமது இரு நாடுகளுக்கும் இடையே பல்லாயிரம் வருடங்களுக்கு மேலாக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது பயன்படுத்திய நாணயங்கள் இன்றும் நமது அருங்காட்சியகங்களில் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தென்னிந்திய நாணயங்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனவே, நாம் அந்த உறவை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதையே இன்று செய்கிறோம். எங்களுக்கு இனி நாணயங்கள் தேவையில்லை. லங்கா QR மற்றும் NIPL இணைந்துள்ளன.
அத்துடன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதனால் எமது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இம்முறையைப் பயன்படுத்தி கொடுப்பனவுகள் மேற்கொள்ள முடியும்.
இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் மற்றும் இலங்கைக்கும் மும்பைக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறன. குறிப்பாக வர்த்தகர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் சுமார் 400,000 வர்த்தகர்கள் தொடர்புபட்டுள்ளதாக கருதுகிறேன். எனவே, இந்திய – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இதனை அடையாளப்படுத்தலாம். எனது அண்மைய உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமரும் நானும் வெளிப்படுத்திய “தொலைநோக்கு அறிக்கையை” செயல்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அண்மையில் பேர்த்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் நான் கலந்துரையாடினேன். இந்த வேலைத்திட்டத்தில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து நாங்கள் திருப்தி அடைகிறோம். மேலும் இந்தச் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.
மேலும், புதிய உறவுகளை கட்டியெழுப்பக்கூடிய ஏனைய துறைகளை அடையாளம் காண வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை இது மகிழ்ச்சியான விடயம். இந்த திட்டத்தின் மூலம், மொரிஷியஸுடனும் இணைந்துள்ளோம். நாங்கள் தீவு நாடுகளாக இருப்பதால் இந்த திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும், நமது இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியான உறவு காணப்படுகிறது. மொரிசியஸுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது. மேலும், பேர்த்தில் மீண்டும் இந்திய வெளியுறவு அமைச்சருடன் எங்களது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தேன். இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.” என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.