சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடர் தான் கடைசி போட்டி என்றும் அவர் அறிவித்துள்ளார்.
டேவிட் வார்னர் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சிட்னியில் விளையாடிய வார்னர், ரசிகர்கள் கண்ணீர் மல்க வெளியேறினார்.
வரும் ஜூன் மாதம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தேர்வாக வேண்டும் என்பதற்காக டேவிட் வார்னர் தன்னுடைய முயற்சிகளை எடுத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் டேவிட் வார்னர் விளையாடுகிறேன் என அடம்பிடித்து இடம் பிடித்திருக்கிறார்.
இந்த நிலையில் முதல் டி20 போட்டி ஹார்பாட்டில் நடந்தது. இதில் டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.அப்போது செய்தியாளரிடம் பேசிய டேவிட் வார்னர் இன்றைய போட்டியில் அணி வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்றைய போட்டியில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இப்படிப்பட்ட ஆடுகளத்தில் அடித்து ஆட வேண்டும். இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என நினைத்தேன். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது தமக்கு கூடுதல் ஓய்வு கிடைத்ததாகவும் தான் குடும்பத்துடன் நேரம் செலவிட்டதாகவும் வார்னர் கூறியுள்ளார்.
என்னுடைய நண்பர்கள் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்று விட வேண்டியது தானே என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் எனக்கு டி20 உலக கோப்பையில் விளையாடி அதிலும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். அது சிறிய பயணமாக தான் இருக்கும். ஏனென்றால் இன்னும் ஆறு மாதத்தில் அந்த தொடர் வருகிறது. இந்த டி20 தொடர் முடிந்தவுடன் நாங்கள் நியூசிலாந்துக்கு செல்கிறோம். அந்தத் தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் உலகக்கோப்பை தொடரில் இடம் பெறுவார்கள் என நினைக்கிறேன்.
அதற்கு முதலில் நாங்கள் இந்த தொடரில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்று டேவிட் வார்னர் கூறியுள்ளார். கடந்த 2021 டி20 உலக கோப்பையில் டேவிட் வார்னர் தான் தொடர் நாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஒரு நாள் கிரிக்கெட் பொறுத்தவரை அவர் உலக கோப்பையை வென்று இருந்தார். தற்போது ஆஸ்திரேலியா எந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத நிலையில் டேவிட் வார்னருக்கு இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை பைனல் தான் கடைசி ஒரு நாள் போட்டியாக இருக்கும்.