ஒரு நிமிடத்தில் ஓராயிரம் எக்ஸ்பிரஷன்களை அள்ளி வீசி ரசிகர்களை திணறடிப்பவர் மறைந்த நடிகை ஷோபா. எத்தனை எத்தனை யுகம் ஆனாலும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத முகம். லட்சணங்களே அசந்துபோகும் அளவிற்கு லட்சணங்கள் பொருந்திய முகம். பெற்றோர் வைத்த பெயர்தான் அவருக்கு பொருத்தமானது. ஆம்… அவரது இயற்பெயர் மகாலட்சுமி!
மகேந்திரனின் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியாகி ‘சூப்பர் டாப்பர்’ அடித்த படம் முள்ளும் மலரும். ரஜினிக்கு ஜோடியாக படாபட் ஜெயலட்சுமி நடித்திருந்தாலும் படத்தின் நாயகியாக பேசப்பட்டவர் ஷோபாதான். படம் வெளியாகி 40 வருடங்களுக்கு மேல் ஆகியும் ரஜினியின் தங்கையாக வள்ளி கதாப்பாத்திரத்தில் நடித்த ஷோபா தமிழ் ரசிகர்களின் இதயங்களின் சோஃபா போட்டு அமர்ந்திருக்கிறார்.
மூடுபனி படத்தில் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலில் வரும் கடல், அருவி, இயற்கையைவிட ஷோபாவின் எக்ஸ்பிரஷன்கள்தான் கண்கொட்டாமல் நம்மை பார்த்து ரசிக்க வைக்கும். அதேபோலவே, ’அடிபெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’… செந்தாழம் பூவில்… ஏதோ நினைவுகள் கனவுகள்’ பாடல்கள் மூலமும் தமிழ்சினிமாவின் அழியாத கோலமாக மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஷோபாவின் முகம்.
கே.பி.மேனன் –பிரேமா தம்பதியின் மகளாக 1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ந்தேதி நடிகை ஷோபா பிறந்தார். ’பேபி மகாலட்சுமி’ என்ற பெயரில் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழில்தான் முதலில் அறிமுகமானார். கதாநாயகியாக அறிமுகமானது ‘உத்ராத ராத்திரி’ என்ற மலையாள படம். நிழல் நிஜமாகிறது, ஒரு வீடு ஒரு உலகம், ஏணிப்படிகள், அழியாத கோலங்கள், அகல்விளக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் ஷோபாவை உச்சத்திற்கு கொண்டுசென்ற படங்கள் முள்ளும் மலரும், அழியாத கோலங்கள், மூடுபனி, பசி உள்ளிட்ட படங்கள்தான்.
1979 ஆம் ஆண்டு வெளியான ‘பசி’ படத்தை துரை இயக்கியிருந்தார். இப்படத்திற்காக ஷோபாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைத்ததோடு சிறந்த தேசிய படமாகவும் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதோடு, மூன்று கேரள மாநில தேசியவிருதையும் கன்னடத்தில் சிறந்த நடிகைக்கான இரண்டு ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்றார். இவை அனைத்தும் 17 வயதில் ஷோபா நிகழ்த்திய சாதனைகள்.
‘பசி’ தேசிய விருது வாங்கிய அடுத்த ஆண்டே, மே-1 ந்தேதி 17 வயதிலேயே தற்கொலை செய்துகொண்டார். பாலுமகேந்திராவுடன் வாழ்ந்து வந்த ஷோபாவின் மரணத்துக்கான பின்னணிக் காரணம் இதுவரை வெளியுலகிற்கு தெரியவில்லை. இதனால், இவரது மரணத்துக்குக் காரணமானவர்களும் சட்டப்படி தண்டிக்கப்படவில்லை. அதுவும், ஷோபா நடிகையாக இருந்தாலும் 17 வயது சிறுமி. இப்படியொரு, தற்கொலைச் சம்பவம் தற்போது நடந்திருந்தால் நிச்சயமாக அவரது தற்கொலைக்குக் காரணமானவர்கள் போக்சோ சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டிருப்பார்கள்.
இயக்குநர் பாலுமகேந்திரா ஷோபாவை மனைவி என்று குறிப்பிட்டதில்லை. தேவதை என்றுதான் குறிப்பிட்டுள்ளார். ’முள்ளும் மலரும்’ படத்தில் ஷோபா கதாநாயகியாக நடிக்கும்போது பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவாளராக தமிழில் அதுதான் அவரது முதல் படம்.ஆனால், அதற்கு முன்பே கன்னடத்தில் அவர் இயக்கிய கோகிலா படத்தில் ஷோபாதான் நாயகி. அடுத்ததாக தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய முதல்படம் ’அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில், இவர் நடித்துள்ளார். அவர் இறந்து 40 வருடங்கள் ஆனாலும், தமிழக மக்களின் இதயங்களின் இன்றும் அழியாத கோலமாகத்தான் அழுத்தமாக பதிந்துள்ளார் ஷோபா!