இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.
துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 381 ஓட்டங்களை பெற்றது.
இரட்டைச் சதம் கடந்த பத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 210* (139) ஓட்டங்களை பெற்றதோடு, அவிஷ்க பெனாண்டோ 88 (88) ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 45 (36) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில், பரீத் அஹமட் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் நபி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அந்த வகையில், 382 ஓட்டங்கள் எனும் இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறிய போதிலும், 6ஆவது விக்கெட்டுக்காக இணைந்து துடுப்பாடிய அஷ்மதுல்லாஹ் ஒமர்ஸாய் மற்றும் மொஹமட் நபி ஆகிய இருவரும் சதம் பூர்த்தி செய்ததோடு, இணைப்பாட்டமாக 242 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து தமது அணியை சிறந்த நிலைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் மொஹமட் நபி 136 (130) ஓட்டங்களையும் அஷ்மதுல்லாஹ் ஒமர்ஸாய் ஆட்டமிழக்காது 149* (115.) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஆயினும் வெற்றி இலக்கை அடைய முடியாத ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 339 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.
இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக பத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.
3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 1 – 0 என முன்னிலை வகிக்கின்றது.