U19 உலகக்கோப்பை தொடரின் அரைறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது.
U19 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் வெய்க்பென் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி தரப்பில் ஹுசைன் – ஷாசைப் கான் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்த நிலையில், ஹுசைன் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஷாசைப் கான் 4 ரன்களில் வெளியேற, பின்னர் கேப்டன் சாத் 3 ரன்களிலும், அஹ்மத் ஹசன் 4 ரன்களிலும், ஹரூன் அர்ஷத் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த அசான் அவைஸ் – அரஃபத் இருவரும் சிறிது நேரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
6வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் சிறப்பாக ஆடிய அரைசதம் அடித்த அசான் அவைஸ் 52 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக ஆடி பவுண்டரிகள் விளாசிய அராஃபத் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 48.5 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் நட்சத்திர பவுலர் டாம் ஸ்டேக்கர் 9.5 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிக்ஸன் – சாம் கூட்டணி களமிறங்கியது. இதில் சாம் 14 ரன்களிலும், கேப்டன் வெய்ப்ஜென் 4 ரன்களிலும், ஹர்ஜஸ் சிங் 5, ஹிக்ஸ் டக் அவுட்டாகியும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் தொடக்க வீரர் டிக்ஸன் – ஆலிவர் கூட்டணி நிதானமாக விளையாடி ஸ்கோரை 100 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது. சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டிக்ஸன் 50 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேம்பெல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 34 ரன்களும், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகளும் தேவைப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் பவுலர்கள் ஆக்ரோஷத்தை பவுலிங் செய்ய, சிறப்பாக ஆடிய ஆலிவர் 49 ரன்களிஉம், தொடர்ந்து வந்த டாம் ஸ்ட்ரேக்கர் 3 ரன்களிலும், பியர்ட்மேன் டக் அவுட்டாகியும் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 164 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடிய மெக்மில்லன் ஆஸ்திரேலிய அணிக்கு த்ரில் வெற்றியை தேடி கொடுத்தார். இதன் மூலம் U19 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இதனால் பிப்.11ஆம் தேதி நடக்கவுள்ள U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.