டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களுக்குமான ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் பும்ரா படைத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
இங்கிலாந்து அணிக்கு எப்படி ஆண்டர்சன் மிகச்சிறந்த பவுலராக செயல்படுகிறாரோ, அதுபோல் இந்திய அணிக்கு பும்ரா மாறிவிட்டதாக அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் பாராட்டினார். மாடர்ன் டே கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்விங் என்ற கலையை பார்க்க முடியாத சூழல் இருந்து வந்த சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிலும் இந்திய மைதானங்களில் ரிவர்ஸ் ஸ்விங்கை கொண்டு மேஜிக்கை நிகழ்த்தி காட்டினார் பும்ரா.
இம்ரான் கான், வாக்கர் யூனுஸ், சோயப் அக்தர், ஜாகீர் கான் ஆகியோரை தொடர்ந்து ரிவர்ஸ் ஸ்விங் கலையை நன்கு அறிந்தவராக உள்ளார் பும்ரா. இதன் மூலம் கடந்த 100 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த பவுலிங் சராசரியை பும்ரா வைத்துள்ளார். அதேபோல் 34 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், சர்வதேச வீரர்களுக்கான ஐசிசி தரவரிசை வெளியாகியுள்ளது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் முதலிடத்தில் இருந்த அஸ்வின், 2 இடங்கள் சரிந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதல்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதற்கு முன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம் பிடித்த முதல் வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.