நெருக்கடியைச் சமாளிக்கும் செயல்முறை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து தெரிவிப்பு.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (2023.02.07) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்ததை அடுத்து அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மு.ப 10.30 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றினார்.
கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த ஜனாதிபதி நெருக்கடியைச் சமாளிக்கும் செயல்முறை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி..
“உலகில் எங்கும் ஏனையவர்களைக் குறைகூறி நெருக்கடியைச் சமாளித்தது கிடையாது. எம்மை எமக்கான ஒளியாக மாற்றாவிட்டால், நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் சீர்செய்யாவிட்டால், நமக்கு நன்மை நடக்காது. நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை.
நெருக்கடிக்கும் தீர்வு இல்லை. முறைமையில் மாற்றம் இருக்காவிட்டால் சிஸ்டம் சேஞ்ச் பற்றி தொண்டைக் கிழியக் கத்தினாலும் நாம் அடிப்படையில் இருந்து மாறாவிட்டால் முறைமைய மாற்ற எம்மால் முடியாது.” எனத் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வருடம் பெப்ரவரியாகும் போது 2023 ஆண்டு பெப்ரவரி மாதத்தை விட சிறந்த நிலைக்கு நாடு முன்னேறியுள்ளது என கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், நெருக்கடிகளைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் தான் உலகமும், நாடுகளும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடிகளைத் தீர்க்க முடிந்துள்ளது எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவருடைய பாரியாரின் வருகையைத் தொடர்ந்து, பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் வருகை இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்கவின் வருகை இடம்பெற்றது.
இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றனர்.
அதனையடுத்து, படைக்கலச் சேவிதர் மற்றும் பிரதி படைக்கலச் சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன்போது, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவி பாளிகா கல்லூரி மாணவியர் ஜயமங்கல கீதம் இசைத்து ஜனாதிபதிபதியையும் பாராளுமன்றத்தையும் ஆசிர்வதித்தனர்.
அதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி அவர்கள் மு.ப 10.25 மணிவரை அங்கிருந்து, பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கலச் சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கலச் சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் பிரவேசித்தனர்.
ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்ததன் பின்னர் 2024.02.08 ஆம் திகதி மு.ப. 9.30 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.