இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்க அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
தென் ஆபிரிக்க நாட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. மொத்தம் 41 போட்டிகள். இந்திய அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டுள்ளது. கடந்த 2022இல் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. நடப்பு தொடரில் இந்திய அணி குரூப்-ஏ மற்றும் சூப்பர் சிக்ஸ் பிரிவில் குரூப் 1இலும் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 244 ஓட்டங்கள் எடுத்தது. பிரெட்டோரியஸ் மற்றும் ரிச்சர்ட் என அந்த அணியின் இருவர் அரைசதம் கடந்தனர். இந்திய அணி சார்பில் ராஜ் லிமிபானி 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
50 ஓவர்களில் 245 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது. அந்த சூழலில் கேப்டன் உதய் மற்றும் சச்சின் தாஸ் இணைந்து அபார கூட்டணி அமைத்தனர். இருவரும் 5ஆவது விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் சேர்த்தனர். 96 ஓட்டங்களில் சச்சின் தாஸ் ஆட்டமிழந்தார். விரைந்து 3 விக்கெட்களை இழந்தது இந்தியா.
அணித்தலைவர் உதய், 124 பந்துகளில் 81 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 48.5 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 248 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா.
வரும் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும்.