இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (பிப்.6) காலமானார். இவரது உடல் இன்று (பிப்.7) மாலை 3 மணிக்கு பெருங்களத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இசை அமைப்பாளர் விஜய் ஆனந்த், பிரபல இயக்குநர் விசு இயக்கத்தில், 1984ஆம் ஆண்டு வெளியான நாணயம் இல்லாத நாணயம் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
பின்னர், துவாரகீஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீ தேவி நடிப்பில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான ‘நான் அடிமை இல்லை’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் இந்தியில் மிதுன் சக்கரவர்த்தி நடிப்பில் வெளியான பியார் ஜுக்தா நஹின் படத்தின் தமிழ் வெர்சன். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஒரு ஜீவன் தான்’ என்ற பாட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
மேலும், தமிழில் ஊருக்கு உபதேசம், பிரபுவின் ‘வெற்றி மேல் வெற்றி’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கன்னட திரையுலகில் விஜய் ஆனந்த் 180க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி, இரண்டு ஆங்கில ஆல்பம் பாடலுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.
முன்னதாக, பெருங்குடல் பிரச்னை காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் சிகிச்சை முடிந்து, ஜனவரி 6ஆம் தேதி வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டிலிருந்தபடியே தொடர் சிகிச்சை மேற்கொண்டதில், உடல் நல முன்னேற்றமின்றி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.