காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்;”COP 28″மாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்த ஜனாதிபதி.
காலநிலை அனர்த்தங்களுக்கு தீர்வுகளை தேடுவதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான முயற்சிகளுக்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக இலங்கையில் சர்வதேச காலநிலைப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க தீர்மானித்திருப்பதாகவும், ஆசிய மற்றும் ஆபிரிக்க வலயங்களின் காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கான முக்கியமான பணியை அதனால் ஆற்ற முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும், அண்மையில் டுபாயில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடான COP 28 இல் ஆசிய வெப்ப வலயத்தை கார்பன் உமிழ்வு பிரதேசமாக மாற்றுவது தொடர்பிலான இலங்கையின் முன்மொழிவையும் நினைவு கூர்ந்தார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று (06) நடைபெற்ற தெற்காசிய ஹைட்ரோமெட் மன்றம் 2024 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.