86 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. 6.5 ஓவரில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத படி 27 ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமமானது. இதனை அடுத்து ஒரு நாள் தொடர் நடைபெற்றது. டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை வென்றனர்.
இந்த நிலையில் தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கேன்பெரா நகரில் நடைபெற்றது. இதை அடுத்து டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏதனான்சி, அதிகபட்சமாக 32 ரன்கள் எடுக்க மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் ஹோப் 4 ரன்களிலும் ராஸ்டன் செஸ் 12 ரன்களிலும் ரோமியோ செப்பர்ட் ஒரு ரன்னிலும் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 24.1 ஓவரில் 86 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று பேர் டக் அவுட்டும் ஒருவர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழக்காமலும் இருந்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் சேவியர் நான்கு விக்கெட்டுகளையும் லேன்ஸ் மாரிஸ் மற்றும் ஆடம் சாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனை அடுத்து 87 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி தங்களுடைய பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேக் பிரேசர் அபாரமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தார். 18 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 41 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும் மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும். இதேபோன்று ஜோஸ் இங்கிலீஷ் 16 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டர்களும் ஒரு சிக்சரும் அடங்கும்.
அரோண் ஹார்டி இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க ஸ்மித் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 6.5 ஓவர்களில் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி ஒயிட் வாஷ் செய்தது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையும் மூன்றாவது t20 போட்டி அடுத்த செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.