காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதே தற்போதைய அரசாங்கம் பெற்ற முதல் வெற்றி என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, 20 இலட்சம் பேர் பயன்பெறும் “அஸ்வெசும” திட்டத்தை அமுல்படுத்தியமையும் 15 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்ததும் ஏனைய சாதனைகளாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தின் ஒரு பகுதியினரின் ஆதரவுடன் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இவ்வாறான பரந்த பணியை அரசாங்கம் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் பாராளுமன்றத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நாட்டை எந்த இடத்தில் வைக்க முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உரித்து (உருமய) திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு (05) நேற்று பிற்பகல் ரங்கிரி தம்புள்ள விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.