இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஸு யன்வெய் (Zhu Yanwei) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (02) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கைக்கான சீன தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைவர் கிவின் லிகொங் (Qin Ligong) அவர்களும் கலந்துகொண்டார்.
பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு இடம்பெறவுள்ள பாரம்பரிய சீனப் புத்தாண்டை முன்னிட்டு சபாநாயகருடன் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அதிர்ஷ்டத்தின் அடையாளமாக சீன மக்களினால் கருதப்படும் டிராகன் சிலையும் சபாநாயகருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஸு யன்வெய் (Zhu Yanwei) குறிப்பிடுகையில், இந்த ஆண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். அத்துடன், 2024 ஆம் ஆண்டு உலகில் அனைத்து நாடுகளுக்கும் சவால்மிக்கதாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பெப்ரவரி 04 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன பிரதித் தூதுவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.