1981 ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம், அப்படத்திற்கு இளையராஜாவை தவிர வேறு எவரையும் இசையமைக்க கூடாது என்ற முடிவோடு இருந்தனர் திரு.வாசுவும், திரு சந்தானபாரதியும்.
அன்றைய காலக்கட்டத்திற்கு இளையராஜாவின் சம்பளம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கும் அளவிற்கு இருந்தது. இருவரும் ராஜாவை சந்தித்தார்கள்.. ராஜா சம்பளத்தை பற்றி பேசவே இல்லை, காரணம் அறிமுக இயக்குனர்களுக்கு தனது இசையால் ஒரு முகவரி அவர்களுக்கு கிடைக்கும் என்ற ஒரே எண்ணத்தில் தான்…
பின்பு படத்தில் இடம் பெற போகும் ஒரு பாடலுக்கு சூழல் விளக்கப்பட்டது… ராஜாவின் மெட்டை தெரிவு செய்தனர்.
பிரசாத் இசைக்கூடத்திற்கு நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்களை இளையராஜா வரவழைத்திருந்தார்,அந்த பாடல் பதிவுக்கான ஒத்திகை நடந்து கொண்டிருந்தது,
அப்பாடலை பாட, பாடகிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது, அப்பாடகி பிரசாத் இசைக்கூடத்தை அடைந்தார். அவர் உள்ளே வரும் வரை அவருக்கு தெரியாது இத்தனை இசைக்கருவிகளின் இசைக்கு மத்தியில் தனது குரல் சங்கமிக்கப்போகிறது என்று….
பாடலின் ராகத்தை உள்வாங்கி கொள்கிறார்…
இசைக்கருவிகளின் ஒத்திகையும் பாடலின் ஒத்திகையும் முடிந்து டேக் போகலாம் என்று முடிவு செய்து பாடல் பதிவாகிறது…
பாடலின் முன்னிசையே, வயலின்கள் வாய்பிளந்து சப்தமிக்க, இடையில் மெல்லியதை புல்லாங்குழல் இசையோடு பாடல் பயணிக்கிறது…
பாடலின் இடையே சிறுசிறு பிழை வர டேக் 1,2,3 இப்படியே போய்க்கொண்டிடுருக்க இறுதியாக 16வது முறை தான் பாடல் 100 சதவீதம் முடிவுபெற்றது…
இதற்கு முன் இவர் பாடிய பாடல்கள் வந்திருந்தாலும், அன்று வரை அவருக்கு தெரியாது, இந்த ஒற்றை பாடல் தன்னை இசை உலகிற்கு புத்துயிர் பாய்ச்சப்போகிறது என்று…
அந்த ஆனந்த ராகத்தில் நனைய வைத்து இசையுலகின் மணிமகுடத்தை சூடினார் ராஜாவின் இசையில் இவர்…
இவை யாவும் நடந்தது, ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் இடம் பெற்ற, திருமதி.உமா ரமணன் பாடிய “ஆனந்த ராகம்” பாடலின் பின்னணி நிகழ்வு…