76 ஆவது தேசிய சுதந்திர தின விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “புதிய தேசம் அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு உலகில் உள்ள அனைவரின் ஆதரவோடும் மீண்டும் கட்டியெழுப்பப்படும் இலங்கையின் அடையாளத்தை உலகிற்கு எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும்.
ஜனாதிபதியின் வருகையைக் குறிக்கும் வகையில் இலங்கை இராணுவத்தினர் இசைவாத்தியங்களை இசைத்த பின்னர், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரால் ஜனாதிபதி, விழா நடைபெறும் மைதானத்தின் கொடிக் கம்பம் அருகே அழைத்து வரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மகுல் இசை மற்றும் சக் ஓசைக்கு மத்தியில் ஜனாதிபதியால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஜனாதிபதி விசேட மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து 105 பாடசாலை மாணவிகள் தேசிய கீதத்தை பாடினர். அதனை தொடர்ந்து பாடசாலை மாணவிகள் ஜெயமங்கல கீதம் மற்றும் காத்தா இசைத்தனர்.
தாய்நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதைச் செலுத்தும் முகமாக 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்த்து வைக்கப்பட்டதோடு இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் 76 ஆவது சுதந்திர தின விழா அணிவகுப்பு பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய கெடட் படையினால் சிறப்பாக முன்வைக்கப்பட்டது.
இலங்கை தேசத்தின் பலத்தையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் இராணுவப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய கெடட் படையைச் சேர்ந்த அதிகாரிகள் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இதில் முப்படைகள் கவச வாகனங்கள் மற்றும் அணிவகுப்புகளும் அடங்குவதோடு 22 ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் 29 அங்கவீனமுற்ற அதிகாரிகள் அணிவகுப்பில் கலந்து கொண்டதோடு முப்படை வாத்தியக் குழுவும் அதில் இணைந்து கொண்டது.
அணிவகுப்பு ஊர்வலம் நிறைவடையும் வரை வீசேட பீடத்தில் நின்றிருந்த ஜனாதிபதி, அங்கு பயணித்த அனைத்து படைவீரர்களுக்கும் மரியாதை செலுத்தியமை விசேட அம்சமாகும்.
அத்துடன் இலங்கையின் வான் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், கபீர் விமானங்கள் உள்ளிட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களின் சாகசங்கள் நிகழ்வை அலங்கரித்தது. பரசூட் நிகழ்ச்சிகளும் விழாவுக்கு வர்ணம் சேர்த்தன.