வடக்குப்பட்டி ராமசாமி சினிமா விமர்சனம் : வடக்குப்பட்டி ராமசாமி அனைவரும் குடும்பத்துடன் திரைக்கு வந்து கவலைகளை மறந்து சிரித்து மகிழ்ந்து செல்ல உத்திரவாதம் தரும் படம்.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி.விஷ்வா பிரசாத் தயாரித்திருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் யோகி.
இதில் சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேசு , தமிழ் , எம்.எஸ். பாஸ்கர் , ஜான் விஜய் , ரவி மரியா, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்லீன் , கூல் சுரேஷ் , நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இணை தயாரிப்பாளர் – விவேக் குச்சிபோட்லா, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வி.ஸ்ரீநட்ராஜ் , இணை தயாரிப்பாளர்கள் – சுனில் ஷா, ராஜா சுப்ரமணியன், எடிட்டர் – சுனில் ஷா, ராஜா சுப்ரமணியன், எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர்-விஜயா ராஜேஷ், இசை-ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு- தீபக், எடிட்டிங் – டி.சிவானந்தீஸ்வரன், கலை இயக்குனர் – ஏ. ராஜேஷ், ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ, நடன இயக்குனர் – எம். ஷெரிப், பாடல்கள் – அறிவு, பாக்கியம் சங்கர், கவிஞர் சாரதி, கூடுதல் திரைக்கதை- விக்னேஷ் பாபு, விக்னேஷ் வேணுகோபால், தயாரிப்பு நிர்வாகி – டி. முருகேசன் , தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – மகேஷ் ஷங்கர் அல்பின் கிளேமண்ட், காஸ்ட்யூமர் – எம். சீனா சுவாமி, பிஆர்ஒ- சுரேஷ் சந்திரா மற்றும் நாசர்.
1960 ஆம் ஆண்டில் வடக்குப்பட்டி என்ற கிராமத்தில் கதை தொடங்குகிறது. இருபது வருடங்களுக்கு முன் இவர்கள் ஊரில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு குலதெய்வமான கண்ணத்தா கோயில் அடித்து செல்லப்பட அந்த அம்மன் அருகில் இருக்கும் மலையில் எழுந்தருளியிருப்பதாக மக்கள் நம்புகின்றனர். கோயில் இல்லாததால் இரவு நேரத்தில் நடமாடும் காட்டேறி உருவத்தால் பொருட்கள் எல்லாம் காணாமல் போவதும், பலர் இறப்பதற்கு காரணம் பேய் தான் என்று நினைத்து இரவில் வெளியே வர மக்கள் பயப்படுகின்றனர். சிறு வயதில் தந்தையை இழந்து தன் தாயுடன் பானைகள் செய்து விற்பனை செய்யும் சிறுவன் ராமசாமி (சந்தானம்). போதிய வருமானம் இல்லாததால் மிகவும் கஷ்டப்படுவதால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்கிறார். ஒரு நாள் இரவு நகைத்திருடன் ஒருவன் பானையை திருடிச் செல்வதை பார்க்கும் சிறுவன் ராமசாமி துரத்திச் செல்ல, அவனுடன் ஊர் மக்களும் துரத்த பானையில் நகையை வைத்து புதைத்து விட்டு ஒடும் போது எதிர்பாராத விதமாக எதிரே வரும் காட்டேறி உருவமுடன் சேர்ந்து தீயில் கருகி திருடன் இறக்கிறான். ஊர்மக்கள் பானைக்குள் இருக்கும் நகையை பார்த்து கண்ணத்தா கடவுள் தான் காட்டேறியை அழித்து தங்களை காப்பாற்றியதாக நினைக்கின்றனர். இந்த நம்பிக்கையை காசாக மாற்ற நினைக்கும் ராமசாமி தன் நிலத்திலேயே பானை அம்மனான உருவகம் செய்து கோயில் கட்டி பூசாரியாக சேசு, நண்பன் முருகேசன்(மாறன்) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கல்லா கட்டுகிறார். இந்த கிராமத்தில் செல்வாக்கு நிறைந்த மூக்கையன் (ஜான் விஜய்) காளையன் (ரவி மரியா) இரண்டு பேரும் பகையாளிகள். இருபது வருடங்களுக்கு பிறகு கதைக்களம் மாறுகிறது. ராமசாமி வளர்ந்து இளைஞனாக கோயில் நிர்வாகத்தையும், பானை தொழிலையும் அமோகமாக நடக்க என்னன்ன தில்லாலங்கடி செய்ய முடியுமோ செய்து பணம் சம்பாதிக்கிறார். இதனை கேள்விப்படும் தாசில்தார் கதிரேசன் (தமிழ்) ராமசாமியுடன் கான்டிரக்ட் போட்டு பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்.ஆனால் இதற்கு சம்மதிக்காத ராமசாமியை மூக்கையனையும், காளையனையும் சண்டையில் மோதவிட்டு கோயிலை மூடும்படி செய்து விடுகிறார் கதிரேசன். வடக்குப்பட்டியில் சண்டையின்றி அமைதி நிலவினால் மட்டுமே கோயில் திறக்கப்படும் என்று பூட்டி அரசு சீல் வைத்து விடுகிறது. அதன்; பின் ராமசாமி கோயிலை திறக்க என்ன முயற்சிகள் செய்தார்? தாசில்தார் முருகேசன் எப்படி தடுக்கிறார்? கிராமத்தில் ஒற்றுமையாக இருந்து கோயிலை திறந்தார்களா? என்பதை கலாட்டா காமெடியை திரையரங்கில் பார்த்து மகிழலாம்.
சந்தானம் ராமசாமியாக ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்து கொள்கிறார். தன்னுடன் கூட்டணி சேர்ந்த சேசு மற்றும் மாறனுடன் சேர்ந்து நிழல்கள் ரவியை பின் தொடர்ந்து செய்யும் சில்மிஷங்கள், மெட்ராஸ் ஐ கண் நோயை கிராமத்தில் பரப்பும் விதம், சண்டை ஏற்படும் என்பதால் காதல் ஜோடிகளை சேர்க்க விடாமல் தடுக்கும் விதம், பணம் சம்பாதிக்க போடும் திட்டங்கள் கிராம மக்களை ஏமாற்ற நினைத்து செய்யும் காரியங்கள் என்று படம் முழுவதும் ஒன்லைன் பஞ்ச் சிரிப்பலைகளில் தெறிக்க விடுகிறார்.
கண் டாக்டர் கயல்விழியாக மேகா ஆகாஷ் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
மாறன் முருகேசனாகவும் சேசு பூசாரியாகவும் சந்தானத்துடன் படம் முழுவதும் கூட்டணி சேர்ந்து செய்யும் சேட்டைகள் நிச்சயம் காமெடிக்கு கை தட்டல் பெறும்.
தமிழ் வில்லன் தாசில்தார் கதிரேசனாக, எம்.எஸ். பாஸ்கர் சிலை சிற்பியாக குடியால் கண் பறிபோன முனுசாமியாக, கிராமத்து செல்வந்தர்களாக ஜான் விஜய் மூக்கையனாகவும் மற்றும் ரவி மரியா கலையானவாகவும், இட்ஸ் பிரசாந்த் ரவிமரியாவின் மகன் முத்துவாகவும், ஜாக்லீன் முத்துவை காதலிக்கும் ஜான்விஜய்யின் மகள் லட்சுமியாகவும், கூல் சுரேஷ் லட்சுமியை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் தனராஜாகவும் அனைவரின் பங்கு படத்திற்கு முக்கியம் வாய்ந்ததாகவும் மற்றும் நிழல்கள் ரவி கண்டிப்பு மிகுந்த மேஜர் சந்திரகாந்த்தாகவும் மொட்டை ராஜேந்திரனுடன் செய்யும் காரியங்கள் தான் படத்தின் இறுதிக் காட்சியை கலகலக்க வைத்துள்ளது.
மலையின் கம்பீரத்துடன் அருகே அமைதியான நதி அருகே வடக்குப்பட்டி கிராமத்தை 60வது 70வது காலகட்டத்தையும், கிராமத்து சூழலையும், மேஜரின் வீடு, கோயில் மண்டபம், கண்ணி வெடி காட்சிகள் என்று மண் மாறாமல் காட்சிக் கோணங்களில் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக்.
காமெடி படத்திற்கு எப்படி காட்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக தன் பணியை செய்துள்ளார் எடிட்டர் சிவாநந்தீஸ்வவரன்.
பானையில் வித்தியாசமான கடவுள் சிலை, கோயில் தோற்றம், கிராமத்தின் இயற்கை எழிலுடன் கூடிய குடிசைகள் என்று கலை இயக்குனரின் கற்பனை வளநேர்த்திக்கு பாராட்டுக்கள்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசையை படத்தின் கதைக்கேற்ப கச்சிதமாக கொடுத்துள்ளார் ஷான் ரோல்டன்.
திரைப்படம் மறைமுகமாக மூடநம்பிக்கை கருப்பொருள்களை கேலி செய்வது போல் காட்டி நையாண்டியுடன் லாஜிக்கில்லா மேஜிக்கை செய்து இறுதியில் அதை சரிசமம் செய்து விடுகிறார் இயக்குனர் கார்;த்திக் யோகி. இதில் சந்தானத்தின் கிராமப்புற ஒப்பனை மற்றும் காமெடி கலாட்டாக்கள், மற்றும் துணை நடிகர்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்தி ஒவ்வொரு காட்சியும் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதுடன், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது படத்தின் கூட்டணி வெற்றி. கதைக்குள் கதையாக ஒன் லைன் விரிவடைந்து அனைவரும் அந்த கிராமத்தில் செய்யும் கலாட்டாக்களை திறம்பட காட்சிப்படுத்தி விறுவிறுப்பு குறையாமல் கொடுத்து வசூலில் வாகை சூடியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. இரண்டாம் பாகத்திற்கான அடித்தளமைத்து தெற்குப்பட்டியில் கதை முடிவதாக கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி.விஷ்வா பிரசாத் தயாரித்திருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி அனைவரும் குடும்பத்துடன் திரைக்கு வந்து கவலைகளை மறந்து சிரித்து மகிழ்ந்து செல்ல உத்திரவாதம் தரும் படம்.