இலங்கையில் வட்டிசாரா வங்கியியல் முறைமையை அர்ப்பணிப்புடன் பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு உயர் சேவைகளை வழங்கும் அமானா வங்கி, அண்மையில் UTO EduConsult இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வில், “ஆர்வமான இஸ்லாமிய நிதியியல்” பிரிவில் தங்க விருதை சுவீகரித்திருந்தது. இந்த விருதுக்கு KPMG ஸ்ரீ லங்காவினால் சுயாதீனமாக வெற்றியாளர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைக் கொள்கைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் அமானா வங்கி, நல்லொழுக்கமான வங்கிச்சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக வளர்ச்சியடைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலனில் ஒப்பற்ற அர்ப்பணிப்பை கொண்டுள்ள வங்கி, தொழிற்துறைக்கு இந்தப் பண்பை முன்கொண்டுவந்துள்ளதுடன், நிதிசார் உள்ளடக்கம், நிலைபேறாண்மை மற்றும் சமூகத்துக்கு பெருமளவு பங்களிப்புகள் ஆகியவற்றை வழங்கி, இஸ்லாமிய நிதியியல் மீதான ஆர்வத்தை பேணி வருகின்றது.
இந்த விருதை சுவீகரித்தமை தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியைப் பொறுத்தமட்டில் “ஆர்வமான இஸ்லாமிய நிதியியல்” தங்க விருதை சுவீகரித்துள்ளமையானது உண்மையில் பெருமைக்குரிய விடயமாக அமைந்துள்ளது. எமது வங்கியியல் மாதிரியில் நாம் சிறந்த கொள்கைகளை பேணுகின்றமைக்கான அர்ப்பணிப்பை இந்த கௌரவிப்பு உறுதி செய்துள்ளதுடன், அனைவருக்கும் நிதிசார் நலனை ஊக்குவிப்பதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.
வங்கியியல் துறையில் வெற்றிகரமான செயற்பாடு என்பது நிதிசார் சாதனைகளினூடாக மாத்திரம் அளவிடப்படுவதில்லை மாறாக மக்களின் வாழ்க்கையில் நாம் ஏற்படுத்தும் நேர்த்தியான தாக்கத்தில் தங்கியுள்ளது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அமானா வங்கியின் அணியினரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த சான்றாக இந்த விருது அமைந்துள்ளது. எமது நேர்த்தியான மற்றும் பொறுப்பு வாய்ந்த ஒழுக்கமான வங்கியியல் சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க இது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதுடன், தொழிற்துறையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் உதவியாக அமைந்துள்ளது.” என்றார்.
பிரத்தியேகமான வங்கியியல் மாதிரி தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் அமானா வங்கி அதிகளவு கவனம் செலுத்துகின்றது. பாரம்பரிய வட்டிசார்ந்த வங்கியியல் மாதிரிகளிலிருந்து வட்டிசாராத அனுகூலங்கள் மற்றும் உள்ளம்சங்கள் பற்றிய விளக்கங்களுடன், பொது மக்கள் மத்தியில் நிலவும் தவறான நம்பிக்கைகள் போன்றவற்றை தெளிவுபடுத்தும் வகையில் “அறிவார்ந்த சந்தைப்படுத்தல்” பிரிவை வங்கி கொண்டுள்ளது. பொது மக்கள் மத்தியில் நிதிசார் அறிவை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. மேலும், வாடிக்கையாளர்களை தெளிவுபடுத்தி அறிவூட்டும் வகையில் தகவல்களைக் கொண்ட அனிமேஷன் வீடியோக்களையும் அறிமுகம் செய்துள்ளது. இவற்றை டிஜிட்டல் கட்டமைப்புகளில் பிரபல்யப்படுத்திய வண்ணமுள்ளது. மூன்று மொழிகளிலும் இவை காணப்படுவதுடன், அறிவை பகிர்வது தொடர்பான உள்ளடக்கமான வழிமுறையில் ஆர்வமான செயற்பாடுகளில் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 100 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக த ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.