சமையல் உலகில் மாதம்பட்டி ரங்கராஜ் புதுமையை புகுத்தி அனைவரது நம்பிக்கையையும் பாராட்டுகளையும் சம்பாதித்து வருகிறார். இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு கல்யாணத்திலும் நாங்கள் இருந்தால்தான் நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கும் என நம்புகிறார்கள். அதாவது திடீர் என எதிர்பார்க்காத விதமாக திருமணத்திற்கு கூட்டம் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது என்பதை எல்லாம் செய்ய நாங்கள் அங்கே இருப்பது அவசியமாகிறது.
நடிகர் சூர்யா அவருடைய உறவினர் வீட்டு திருமணத்தில் எங்கள் டீம்தான் சமையல் செய்தது. அந்த சமையலை அவர் சாப்பிட்டு பார்த்து நன்றாக இருக்கிறது என பாராட்டினார். நடிகர் கார்த்தியின் திருமணத்திலும் நாங்கள்தான் சமைத்து கொடுத்தோம். விக்ரமின் மகள் திருமணத்திலும் எங்கள் டீம்தான் சமையல் செய்தது.
இயக்குநர் லிங்குசாமியின் அண்ணன் மகள் திருமணம், ராஜமவுலியின் மகன் திருமணம், யோகிபாபு மகன் பிறந்தநாள், அர்ஜுனின் மகள் நிச்சயதார்த்தம் என நிறைய விழாக்களில் சமையல் செய்துள்ளோம். ஷாரூக்கான் எங்கள் சமையலை சாப்பிட்டு பார்த்துவிட்டு எங்கள் செஃப்பை பார்த்து நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டு சென்றார்.
மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் என்றாலே எல்லோரும் காஸ்ட்லி என நினைக்கிறார்கள். நாங்கள் எங்கள் பணிகளை சிஸ்டமேட்டிக்காக செய்கிறோம். ஹவுஸ் கீப்பிங் என எடுத்துக் கொண்டால் கை கழுவும் என இடத்தில் ஒருவர் நின்று கொண்டு டிஸ்யூ பேப்பரை எடுத்துக் கொடுப்பார். இதற்கெல்லாம் நான் ஊதியம் கொடுக்க வேண்டும்.
என்னுடைய ரேட்டிங் எல்லாமே நியாயமானதாக இருக்கும். பிசினஸ் என்றால் லாபம்தான். அதற்காக ஸ்டார்கள் மட்டுமே அணுகும் அளவுக்கு எங்கள் விலை பட்டியல் இருக்காது. மற்றவர்கள் வாங்கும் பணத்தில் 10 சதவீதம் மட்டுமே எங்களது கூடுதலாக இருக்கும். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரு படங்களை கொடுப்பேன். அதற்கு மேல் கொஞ்சம் கஷ்டம்தான்.
3 மாதம் அல்லது 6 மாதங்களுக்கு எங்கள் கேட்டரிங்கின் ஷெட்யூல் தெரிந்துவிடும். அது போக மற்ற நேரங்களில் நடிப்பேன். அடுத்த மாதம் அல்லது மார்ச் மாதம் அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சைவம், அசைவம் என தனித்தனி உணவகத்தை திறக்கிறோம். அப்பாவின் கைபக்குவம் உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை.
சமையலில் நேரம் தவறாமை மிகவும் முக்கியம். ஒரு வாடிக்கையாளரை 9.30 மணிக்கு நான் சந்திப்பதாக கூறியிருந்தால் சரியாக அந்த இடத்தில் நான் இருப்பேன். இதுவே அவர்களுக்கு நம் மீதான நம்பிக்கையை கொடுக்கும். அர்ப்பணிப்பும் முக்கியம். மாதம்பட்டி தங்கவேல் என்பது அப்பா உருவாக்கிய பிராண்ட். இன்று சமையலால் அந்த ஊருக்கே பெருமை என சிலர் சொல்கிறார்கள்.
மாதம்பட்டி சிவக்குமார் என்ற தயாரிப்பாளர்தான் அந்த ஊருக்கு பெருமை சேர்த்தார். இவர் தனது சினிமா டீமுக்கு அப்பாவை சமையல் செய்ய அழைத்தார். சின்னதம்பி பெரியதம்பி, தாய்நாடு, பூவும் புயலும் ஆகிய பட யூனிட்டுகளுக்கு அப்பா சமைத்து கொடுத்திருந்தார். இதனால் எல்லாருமே அப்பாவை மாதம்பட்டி தங்கவேல் என அழைத்தார்கள், நாளடைவில் அதுவே ஒரு அடையாளமாக மாறியது. இவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.