பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் (29) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் (2020), இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சராகவும் பின்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, தேசிய சுதந்திர முன்னணி கட்சியைச் சேர்ந்த ஜயந்த சமரவீர இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுகங்கள் வழங்கல் வசதிகள் இயந்திரப் படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, லொஹான் ரத்வத்த கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.