வெஸ்ட் இண்டீஸ் வென்றதில் மகிழ்ச்சி:கம்மின்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட் ரசிகனாக சொல்கிறேன்.. வெஸ்ட் இண்டீஸ் வென்றதில் மகிழ்ச்சி.. கம்மின்ஸ் ஓபன் ஸ்பீச்!

டெஸ்ட் கிரிக்கெட்டின் தீவிரனாகவும், ஒரு கிரிக்கெட் வீரராகவும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை கண்டு மகிழ்ச்சியடைவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதில் ஆஸ்திரேலியா அணியின் கோட்டை என்று கொக்கரிக்கப்பட்ட காபா மைதானத்தில் வைத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததில்லை என்று வரலாற்றை மாற்றியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வெற்றிக்கு ஷமார் ஜோசப் என்ற ஒற்றை வீரர் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் தான் ஷமார் ஜோசப் அறிமுகம் செய்யப்பட்டார். 13 மாதங்களுக்கு முன் ஒரு மாலில் செக்யூரிட்டி பணியில் இருந்த ஒருவர், உலக டெஸ்ட் சாம்பியனை அதன் கோட்டையில் வைத்து வீழ்த்துவதற்கு காரணமாக அமைந்துள்ளார்.

காலில் ஏற்பட்ட காயத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் வெற்றியை மட்டுமே மனதில் வைத்து 10 ஓவர்களை தொடர்ச்சியாக வீசினார் ஜோசப். மொத்தமாக 68 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்த வெற்றி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ள நிலையில், எதிரணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்-ம் மகிழ்ச்சியடைந்ததது கூடுதல் சுவாரஸ்யம்.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி குறித்து பேட் கம்மின்ஸ் பேசுகையில், நாங்கள் அனைவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிவிட்டோம். ஆனால் ஷமார் ஜோசப்பிற்கு இதுதான் அறிமுக தொடர். இந்த தொடரில் அவரின் அறிமுகமே ஆரவாரமாக அமைந்துள்ளது. இளம் வீரர்களை இப்படியான திறமையுடன் பார்ப்பதே மகிழ்ச்சியை அளிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுக வீரர்கள் குறித்து ஏராளமான பேச்சுகள் இருந்தது.

ஆனால் அவர்கள் இங்கிலிருந்து செல்லும் போது இரு சூப்பர்ஸ்டார் வீரர்களை உருவாக்கி செல்கிறார்கள். நமக்கு தான் அது தெரியவில்லை. ஒரு கிரிக்கெட் ரசிகனாக, குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் ரசிகனாக, எனக்குள் இருக்கும் ஒருவன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வெற்றிக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமார் ஜோசப்பை தங்களின் ஓய்வறைக்கு அழைத்த பேட் கம்மின்ஸ், அவரின் ஜெர்சியில் கையெழுத்து பெற்று அவர் மீதான அன்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் ஷமார் ஜோசப்பும், பேட் கம்மின்ஸின் ஜெர்சியில் கையெழுத்து பெற்று மரியாதை அளித்துள்ளார். இந்த புகைப்படங்களில் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *