தமிழ்ப்புத்தாண்டுக்கு பிரதமருக்கு சமைத்த போது நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார்.
தற்போது பல்வேறு பிரபலங்களின் வீட்டு இல்ல விசேஷங்களுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகிறார். அவருடைய சமையலில் ஒரு குறை கூட காண முடியவில்லை என அந்த விழாவில் சாப்பிட்டு பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு அன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்வுக்கு சமைத்தார். இதுகுறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 1983 ஆம் ஆண்டு லட்சுமி கேட்டரிங் என எனது தந்தை சமையல் தொழிலை தொடங்கினார். நான் 2002 ஆம் ஆண்டு எனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குடும்பத் தொழிலான சமையலுக்குள் வந்தேன். எனக்கு சிறு வயது முதலே பிசினஸ்மேனாக வேண்டும் என்ற கனவு இருந்தது
சின்ன வயதில் கிச்சனிலும் டைனிங் ஹாலிலும்தான் நான் அதிக நேரத்தை செலவிடுவேன். எனது அப்பாவுக்கு நான் ஒரு என்ஜினியராகவோ டாக்டராகவோ வேண்டும் என்ற கனவு இருந்தது. ஏனென்றால் சமையல் என்பது மிகவும் கடினமாக தொழில், மன அழுத்தத்தை ஏற்படும் தொழில், நான் பட்ட கஷ்டத்தை என் மகன் படக் கூடாது என அப்பா அடிக்கடி கூறுவார்.
காலை 9 மணிக்கு போய்விட்டு மாலை 6 மணிக்கு வரும் வேலைக்கு நான் செல்ல வேண்டும் என்றே எனது தந்தை விரும்பினார். இதற்காக பிஎஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தேன். இதையடுத்து எம்சிஏ படித்தேன். இதைத் தொடர்ந்து அனிமேஷனில் ஒரு படிப்பு படித்துவிட்டு வேலை வாய்ப்புக்கான இன்டர்வியூக்களை சந்தித்தேன்.
அப்போதுதான் எனது அப்பா எனது உதவி வேண்டும் என கேட்டார். இதனால் நானும் சந்தோஷமாக சமையல் கலைக்குள் வந்துவிட்டேன். எங்களது சமையல்காரரிடமே சமையலை கற்றுக் கொண்டேன். எனது சமையலுக்கு பின்னால் 39 ஆண்டு கால கதை இருக்கிறது.
அப்பாவின் தொழிலை நானும், என் தம்பி, சித்தப்பா, அவர்களுடைய பிள்ளைகள் செய்து வருகிறோம். எங்கள் குழுவில் 2000 பேர் உள்ளனர். என் அப்பா சமையலை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும். முன்பெல்லாம் ஒரு தேதியில் 10 திருமணங்கள் நடக்கும். ஆனால் எல்லாவற்றிலும் எங்களால் தனிப்பட்ட முறையில் இருந்து சமையல் செய்ய முடியாது.
இதனால் நான் வந்ததுமே ஒரு நாளைக்கு 4 அல்லது 5 ஆர்டர்களை எடுத்துக் கொண்டு வருகிறோம். சமையல் ஆர்டர்களை குறைத்ததற்கு காரணமே ஒப்புக் கொண்ட இடத்தில் யாருக்கும் குறை ஏற்படாமல் நம் வீட்டு கல்யாணம் போல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்! விருந்தோம்பலில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
1983 ஆம் ஆண்டு அப்பா ஒருத்தரே காய்களை வெட்டி பாத்திரம் தேய்த்து சமையலை செய்துவிட்டு வந்தார். பிறகு மாதம்பட்டியில் இருந்த 4 அல்லது 5 பேரை அப்பா கூட வைத்துக் கொண்டு தனது தொழிலை வளர்த்தார். அது பின்னாளில் 100 அல்லது 200 பேர் ஆனது. தற்போது எங்கள் நிறுவனத்தில் 2200 பேருக்கு மேல் இருக்கிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் அதை 20 ஆயிரமாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
ராஜமௌலி சார் வீட்டு கல்யாணத்திற்கு சமைக்க அவருடைய உறவினர் என்னை பரிந்துரைத்தார். அது போல் ராமதாஸ், சைதை துரைசாமி வீட்டு விசேஷங்களுக்கும் நான் சமையல் செய்து கொடுத்துள்ளேன். நம்பிக்கை இருந்தால் போதும் பிரதமர் மோடி என்றில்லை, அமெரிக்க அதிபருக்கும் கூட நாம் சமையலை செய்து கொடுக்கலாம்.
தமிழ்ப்புத்தாண்டுக்கு பிரதமருக்கு சமைத்த போது நிறைய ப்ரோட்டோக்கால்கள் இருந்தன. எங்கள் குழுவினருக்கு ஐடி கார்டுகள், நாங்கள் சமைக்கும் உணவின் மூலப்பொருள்கள் சோதனை, நாங்கள் சமைக்கும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் இருந்தனர். நாங்கள் சமைத்த பிறகு அந்த உணவை சாப்பிட்டு பார்த்துவிட்டு சோதனை செய்து அவர்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் பிரதமருக்கு பரிமாறப்பட்டது.
பிரதமர் அந்த இடத்திற்கு வந்த பிறகு யாரும் எங்கும் செல்ல கூடாது, செல்போன், கேமராக்களை பயன்படுத்தி போட்டோக்களை எடுக்கக் கூடாது. பிரதமருக்கு யார் பரிமாறுவது, எப்படி பரிமாறுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்தன. எங்கள் டீமின் ஆதார் கார்டு, அவர்களுடைய பேக்கிரவுண்ட் உள்ளிட்டவைகளை கேட்டு வாங்கிக் கொண்டனர்.
பிரதமருக்கு ஊறுகாய், வடகம், இட்லி பொடி, பருப்பு பொடி, இனிப்புகள் உள்ளிட்டவைகளை பேக் செய்து அவருக்கு பரிசாக கொடுத்தேன். இவ்வாறு மாதம்பட்டி ரங்கராஜ் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.