சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், பப்லு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான அனிமல் படத்தை பாலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டர்களுக்கு சென்று பார்த்து கொண்டாடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க வைத்தனர். ஆனால், அந்த படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் ஆல்ஃபா மேல் எனும் ஆணாதிக்க புத்தியை தென்னிந்தியர்கள் சமீபத்தில் ஓடிடியில் படம் வெளியாகி உள்ள நிலையில், போட்டு பொளந்து வருகின்றனர்.
இந்தியிலும் சில பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் அனிமல் படத்துக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஆனால், படத்தின் கிராஃப்ட்களை பார்க்காமல் கதையை மட்டும் பார்த்து விமர்சிக்கக் கூடாது என விமர்சிப்பவர்களுக்கு எதிராக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
அர்ஜுன் ரெட்டி படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் போதே சரியான சைக்கோ படம் என்றும் ஆபாசமான காட்சிகள் நிறைந்து காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. ஆனால், இளைஞர்கள் அந்த படத்தை பார்த்து கொண்டாட ஆரம்பித்த நிலையில், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் கபிர் சிங் என அந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்காவே இயக்கி 400 கோடி ரூபாய் வசூலை அள்ளினார். தமிழில் சியான் விக்ரம் மகன் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான ஆதித்யா வர்மா இங்கே ஓடவில்லை. இந்நிலையில், அனிமல் படம் 900 கோடி வசூலை ஈட்டிய நிலையில், தமிழ்நாட்டில் பல பிரபலங்கள் தொடர்ந்து அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அனிமல் படத்தை பார்த்து விட்டுத் நடிகை ராதிகா சரத்குமார் இப்படியொரு கிரிஞ்ச் படத்தை எப்படி எடுத்தார்கள் என்றும் வாந்தி தான் வருது என படத்தின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தனது கண்டனத்தை தெரிவித்தார்.
கேப்டன் மில்லர் மற்றும் கோட் படங்களின் ஒளிப்பதிவாளரான சித்தார்த்தா நுனி அனிமல் படம் மனநோயாளிகளை உருவாக்கும் என்றும் இது போன்ற படங்களை எடுக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். சிங்கப்பூர் சலூன் படத்தின் புரமோஷன் போது ஆர்ஜே பாலாஜி அந்த படத்தை எல்லாம் பார்க்கவே மாட்டேன் என்றும் பெண்களை கேவலமாக நடத்தும் படங்களை பார்த்து விட்டு அதற்கு ரசிகர்கள் கை தட்டுவதை பார்த்து விட்டால் என்னையும் அறியாமல் அப்படியொரு கேவலமான படத்தை எடுத்து விடுவேன் என கூறியிருந்தார்.
“Animal is for the animal,by the animal and for the animal. And I don’t mean any offense to real animals” அனிமல் படம் அனிமல்களுக்காக அனிமலால் எடுக்கப்பட்ட படம். இதில், நான் நிஜ விலங்குகளை குறிப்பிடவில்லை என மிருக புத்தியுடன் படத்தை இயக்கியுள்ள சந்தீப் ரெட்டியை விளாசி இருக்கிறார் பாடகர் ஸ்ரீநிவாஸ்.