சானியா மிர்சா – சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், தற்போது சோயிப் மாலிக் சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக்கை மணந்து கொண்டார். எல்லை தாண்டிய இந்த காதல் ஜோடிகள் திருமணம் முடிந்தாலும் பரஸ்பரம் தங்கள் நாட்டுக்காக தொடர்ந்து சர்வதேச தொடர்களில் ஓய்வு பெறும் வரை பங்கேற்றனர்.
துபாயில் வசித்து வந்த சானியா – சோயிப் மாலிக் ஜோடிக்கு ஒரு மகனும் உள்ளார். அவரது பெயர் இசான் மிர்சா மாலிக். இதற்கிடையே சானியா – சோயிப் மாலிக் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் வதந்திகள் கடந்த சில மாதங்களாகவே பரவி வந்தன. இதற்கு ஏற்றார் போல் சானியா மிர்சாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூசகமாக அவ்வப்போது பதிவிட்டு வந்தார். குறிப்பாக சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில் சோயிப் மாலிக் தொடர்பான விபரம் மற்றும் அவருடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை நீக்கியது பரபரப்பை கிளப்பியது.
இப்போது சோயிப் மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான போட்டோக்களை இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களின் திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் சோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்ட பதிவை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சானியா மிர்சா – சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு இருந்ததும், சானியா மிர்சாவை, சோயிப் மாலிக் பிரிந்து இருப்பதும் இந்த திருமணம் மூலம் உறுதியாகி உள்ளது. சோயிப் மாலிக் முதலில் ஆயிஷா சித்திக் என்பவரை கரம் பிடித்தார். அவரை விவாகரத்து செய்த பிறகு சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்த நிலையில் சோயிப் மாலிக் சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார்.
சானியா மிர்சாவை சோயிப் மாலிக் பிரிந்து வேறொரு திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்துள்ள சானியாவின் ரசிகர்கள் சோயிப் மாலிக்கை வசைபாடி வருகிறார்கள். இந்த நிலையில், சானியா மிர்சாவின் தந்தை நட்சதிர ஜோடி பிரிந்தது குறித்து தனது மவுனத்தை கலைத்துள்ளார்.
இது தொடர்பாக சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா கூறுகையில், சானியா மிர்சா விவகாரத்து (குலா-‘khula) செய்து கொண்டார்’ என ஒரே வரியில் முடித்துவிட்டார். குலா என்பது இஸ்லாமிய பெண்கள் தன்னிச்சையாக தனது கணவரை விவகாரத்து செய்து கொள்வதை குறிக்கும். தற்போது நட்சத்திர ஜோடி பிரிந்த நிலையில் அவர்களின் ஐந்து வயது மகன் இசான், சானியாவுடனே வசித்து வருகிறார்.