எம்.ஜி.ஆர் காட்டிய உச்சபட்ச பெருந்தன்மை..!!

கருத்து வேறுபாடு; தயங்கியபடியே தோட்டத்திற்குச் சென்ற இயக்குனர் ஸ்ரீதர்; எம்.ஜி.ஆர் காட்டிய உச்சபட்ச பெருந்தன்மை

ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தை இயக்கினார்.

தமிழ் சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர்களில் முக்கியமானவர் ஸ்ரீதர். இவர் இயக்கிய காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை இயக்கியுள்ள ஸ்ரீதர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக இன்றும் போற்றப்படுகிறார்.

ஸ்ரீதர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் 1963-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை தயாரித்து இயக்கிய ஸ்ரீதர் அப்போதே ரவிச்சந்திரன் நாயகனாக நடிக்க காதலிக்க நேரமில்லை என்ற படத்தையும் இயக்கிய தாயாரித்துக்கொண்டிருந்தார். இந்த இரு படங்களின் விளம்பரங்கள் அன்று செய்தித்தாள்களில் வந்தது.

இந்த விளம்பரங்கள் வெளியான பிறகு எம்.ஜி.ஆரின் அன்று சிந்திய ரத்தம் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. புதுமுகங்களை வைத்து காதலிக்க நேரமில்லை என்ற கலர் படத்தை எடுக்கும் ஸ்ரீதர் உங்களை வைத்து பிளாக் அன்ட் வொயிட் படத்தை எடுக்கிறார் என்று ஸ்ரீதர் குறித்து எம்.ஜி.ஆரிடம் அவரது நண்பர்கள் கேட்க, அதனால் தான் எம்.ஜி.ஆர் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்று ஸ்ரீதர் பின்னர் தெரிந்துகொண்டார்

ஆனாலும் அதன்பிறகு ஸ்ரீதர் இது குறித்து எம்.ஜி.ஆரை சந்தித்து எவ்வித விளக்கமும் கொடுக்காத நிலையில், அதன்பிறகு பொது நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்’துகொண்டாலும் பார்த்தால் பேசிக்கொள்வார்களே தவிர, இந்த படம் பற்றி எதுவும் பேசியதே இல்லை. இதனிடையே ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் கடும் பொருளாதா நெருக்கடியில் இருந்தபோது அவரது நண்பர் இந்தி நடிகர் ராஜேந்திரகுமார் எம்.ஜி.ஆரை வைத்து படம் பண்ண கால்ஷீட் கேளுங்க என்று கூறியுள்ளார்.

அன்று சிந்திய ரத்தம் படத்தின் பிரச்சனை காரணமாக எம்.ஜி.ஆரை சந்திக்க தயங்கிய ஸ்ரீதர் ஒரு கட்டத்தில் தனது தயக்கத்தை விட்டு, எம்.ஜி.ஆரின் உதவியாளரிடம் அவரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், அவர் இங்கு வர வேண்டாம், எங்கள் சந்திப்பு ஒரு பொது இடத்தில் நடக்கட்டும் அது நம்பியார் வீடாக இருந்தால் நல்லது என்று கூறியுள்ளார். மேலும் அவர் இங்கே வந்தால் என் காலில் விழுந்து கால்ஷீட் வாங்கி விட்டதாக சொல்வார்கள். இந்த அவமானம் தேவையில்லை என்பதால் எம்.ஜி.ஆர் பொது இடத்தில சந்திப்பதாக கூறியுள்ளார்.

ஆனாலும் எம்.ஜி.ஆரை அவரது தோட்டத்தில் சந்திப்பதாக சொல்லிவிட்டு நேராக ராமாவரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஸ்ரீதரை வரவேற்ற எம்.ஜி.ஆர், அவருக்கு சரியான உபசரிப்பு கொடுத்து, அவர் கிளம்பும்போது மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பேசிய ஸ்ரீதர், நான் இப்போது சிவாஜி நடிப்பில் படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த படம் பாதியில் நிற்பது உங்களுக்கு தெரியும்.

நிச்சயமாக அந்த படம் வெளியாகும். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது. அதனால் எனது பொருளாதார நெருக்கடியை புரிந்துகொண்டு எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், நான் சினிமாவில் வேகமாக வளர்ந்துவதை பார்த்து பொறாமைபட்ட சிலர் இப்போது நான் பொருளாதா நெருக்கடியில் இருப்பதை பார்த்து ஆனந்தமாக இருக்கிறார்கள். உங்கள் படத்தை முடித்துவிட்டால் நான் மேலே வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் முடியும்வரை என்னை பற்றி உங்களிடம் யாராவது எதாவது சொன்னால், நீங்கள் தன்னிச்சையாக முடிவு எடுக்காமல், என்னை கூப்பிட்டு கேளுங்கள். அதற்கான விளக்கத்தை நான் கொடுக்கிறேன் என்று ஸ்ரீதர் சொல்ல, எம்.ஜி.ஆர் சிரித்தபடியே சம்மதம் கூறியுள்ளார். அதோடு இல்லாமல், ஸ்ரீதரின் படத்தில் நான் நடிக்கினேன். 3 மாதங்கள் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.

அதன்பிறகு அந்த கடிதத்தை வைத்து பைனான்சியர்களிடம் பணம் பெற்ற ஸ்ரீதர் படத்தை வேகமாக முடித்தார். அப்படி உருவான படம் தான் உரிமை குரல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *