ஏ.டி.எம் அட்டை மூலம் பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை தியத்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தியத்தலாவ நகரிலுள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்த பெண் ஒருவர், அந்த இடத்தில் இருந்த நபரிடம் கார்டை கொடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் தருமாறு கூறியுள்ளார்.
பணம் கிடைப்பது கடினம் என்று கூறிய அந்த நபர், ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் அவருடைய அழைப்பேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. குறித்த செய்தியின் பிரகாரம் குறித்த பெண் தியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் தியத்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேகநபர் பஸ்ஸில் ஏறி தப்பிச் சென்றமை தெரியவந்ததையடுத்து, சுற்றுவட்டார பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இந்தச் செய்திக்கு அமைய ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து தியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அட்டவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர். சந்தேக நபர் முறைப்பாட்டாளர் கொடுத்த ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறு கார்டை கொடுத்து அந்த அட்டையை திருடி பணத்தை எடுத்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. தியத்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.