உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர்..!!

வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இணையம் சார்ந்த தொழில் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர், யூடியூப் சேனல் தொடங்கியது என்பது குறித்து பேசினர்.

அதில், “நாங்கள் எல்லோரும் ஏதோ ஒரு பணியை செய்துகொண்டிருந்தவர்கள். கிராமத்தில் நாங்கள் கொண்டிருந்த அத்தனை தொழிலும் தோல்வியே சந்தித்தது. எங்கள் கிராமத்தின் வழக்கப்படி, அனைவரும் வெளிநாடு செல்லலாம் என்றே முடிவு செய்திருந்தோம்.

அப்போதுதான் வளர்ந்து வரும் இணையத்தை கொண்டு ஏதாவது செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து, ட்ரெண்டில் இருந்து சமையல் பக்கம் எங்களின் கவனம் சென்றது. தாத்தா ஏற்கெனவே சமையல்காரர் என்பதால் அந்த முடிவு எங்களுக்கு எளிமையாக அமைந்தது. அப்படிதான் யூடியூப் சேனல் தொடங்கினோம். அது இன்று வரை சென்றுகொண்டிருக்கிறது” என்று பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து விளம்பரங்களில் கிடைக்கும் வருவாய் குறித்து பேசிய வில்லேஜ் குக்கிங் குழுவினர், “நிச்சயம் எங்களுக்கும் விளம்பரங்கள் வந்தது. ஆனால், யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் முன்பே எங்களுக்குள் நாங்களே சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டோம்.

கன்டென்டை தாண்டி அந்த விதிமுறைகளை எங்களுக்கு நாங்களே வைத்துக்கொண்டோம். அப்படியான விதிமுறைகளில் ஒன்றுதான் மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை எங்களின் யூடியூப் சேனலில் பதிவிட கூடாது என்பது.

ஒரு ரூபாய் கூட ஸ்பான்சர்ஷிப், நன்கொடை, விளம்பரங்கள் மூலமாக பெறக் கூடாது என தீர்மானித்தோம். இதனை முடிந்தவரை இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம். விக்ரம் படத்தில் நடித்ததுக்கு கூட நாங்கள் எந்த காசும் வாங்கவில்லை.

நிறைய ஆஃபர்கள் வந்தும் அதனை பெற நாங்கள் மறுத்துவிட்டோம். ஒருவரிடம் கை நீட்டி காசு வாங்கிவிட்டால், அந்தக் காசுக்காக பணிபுரிய வேண்டும். அவர்களுக்க்காக எந்த வீடியோவில் நிமிடங்களை ஒதுக்க வேண்டி வரும். எங்கள் வீடியோக்கள் பிடித்ததனால்தான் மக்கள் அவற்றை பார்க்க வருகிறார்கள்.

அப்படி வருபவர்களிடம், விளம்பரங்களை போட்டு ஏதேனும் பொருட்களை வாங்க சொல்வதில் எங்களுக்கு விருப்பமில்லை. அதுமட்டுமில்லை, விளம்பரங்களில் இன்றைக்கு ஒரு காசு, நாளைக்கு ஒரு காசு என்று வரும்.

அது பணத்தின் மீதான ஆசையை அதிகப்படுத்தும். அதை தவிர்க்கும் பொருட்டே யூடியூப்பில் இருந்து கிடைக்கும் வருமானமே போதும், ஆடியன்ஸுக்கு கொடுக்க வேண்டிய கன்டென்ட்டை தரமாக கொடுத்தால் போதும் என்று விளம்பரங்களை எடுத்துக்கொள்வதில்லை.

எங்கள் சேனலுக்கு 5 மில்லியன்ஸ் பார்வையாளர்கள் இருக்கும்போதே சாக்லேட் நிறுவனம் ஒன்று விளம்பரத்துக்காக எங்களை அணுகியது. 10 வினாடி வீடியோவுக்கு ரூ.4.5 லட்சம் தருவதாகவும் சொன்னார்கள். ஆனால், நாங்கள் அந்த ஆபரை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் இதுபோன்ற வாய்ப்புகள் வருகின்றன. எதனையும் நாங்கள் ஏற்கவில்லை” என்று தெரிவித்தனர்.

வில்லேஜ் குக்கிங் சேனல்: சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் ஆகிய சகோதர்களுடன் அவர்களுடைய தாத்தா பெரிய தம்பியும் இணைந்து உருவானதுதான் இந்த வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல்.

இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர்களில் சுப்பிரமணியன்தான் இதன் மூல கர்த்தா. கேமராவையும் தொழில்நுட்பத்தையும் இவர்தான் கவனிக்கிறார். அண்மையில் வெளியான கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் இந்தக் குழுவினர் தலைகாட்டியுள்ளனர்.

சுப்பிரமணியன் எம்பில் பட்டதாரி ஆவார். 2018-ல் உணவு தொடர்பான வீடியோக்களை உருவாக்க நினைத்தார். அவரது சகோதர்கள் வேலைக்காக வெளிநாடு செல்லத் தீர்மானித்திருந்த காலம் அது.

அதை தடுத்த சுப்பிரமணியன், தனது சகோதரர்களுடன் இணைந்து அப்போது சிறு முயற்சியாக வீடியோக்களை உருவாக்கியிருக்கிறார். மற்ற வீடியோக்களில் இருந்து வித்தியாசப்பட்டுத் தனித்துவமான வீடியோக்களை உருவாக்கத் தொடங்கியபோது அவர்களுக்குப் பார்வைகள் கிட்டத் தொடங்கின.

வீட்டுக்குள் சமையல் வீடியோக்கள் அடைபட்டுக் கிடந்தபோது இவர்கள் அதை அசாலான கிராமத்து வெளிக்கு எடுத்து வந்தனர். காட்டுப் பகுதியில் கல் வைத்து அடுப்பு மூட்டி சமையல் செய்தனர்.

இதற்காகவே பலரும் இந்த சேனலைப் பாக்கின்றனர் எனலாம். அம்மி வைத்து மசாலா அரைப்பதைப் பார்ப்பதே அலாதியானது. குழுவில் உள்ள அய்யனார் ‘மங்கலகரமான மஞ்சள்’ எனத் தொடங்கும்போது பார்ப்பதற்கே சுவையாக இருக்கும். இவருக்கெனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அதுபோல் காய்கறிகள் வெட்டுவதிலும் தனித்துவம்.

சமையல் செய்வதற்காக இடம் தேடி அலைவது, அதற்கான பாத்திரங்கள், அடுப்பு மூட்டக் கல் என இதற்காக அவர்கள் வரும் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கைச் செலவிடுகிறார்கள். அதுபோல் எந்தச் சமையல் செய்தாலும் குறைந்தது 100 பேருக்குச் சமைக்கிறார்கள். அதனால் அதற்கும் செலவாகிறது. சாப்பாட்டை முதியோர் இல்லம், ஊரார் ஆகியோருடன் இணைந்து உண்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியுடன் இணைந்து வெளியிட்ட வீடியோ 48 மணி நேரத்தில் 90 லட்சம் பார்வைகளைக் கடந்தது. மட்டுமல்லாமல் அவர்களது சந்தாதரர்கள் எண்ணிக்கையும் பன் மடங்கு அதிகரித்தது. இவர்களது வீடியோ வெறும் சமையலை மட்டுமின்றி, சுற்றுப்புறங்களையும் வாழ்க்கை முறையையும் பதிவுசெய்கிறது. இதன் மூலம் சுவையுடன் பார்வையாளர்களின் ஞபாகங்களும் தூண்டப்படுகிறது. தென்னிந்தியாவின் முதல் டைமண்ட ப்ளே பட்டன் அந்தஸ்தைப் பெற்றுள்ளது இந்த சேனல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *