மஹிந்த யாப்பா அபேவர்தன, உகண்டா நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், உகண்டா நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகருக்கிடையில் சந்திப்பு

பொதுநலவாய அமைப்பின் சபாநாயகர்களின் (CSPOC) 27வது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசவேனி, பிரதமர் ரொபின் நபஞ்ஜ, உகண்டா சபாநாயகர் அனிடா அனெத் அமங் ஆகியோரைச் சந்தித்தார்.

அத்துடன், சபாநாயகருக்கும் உகண்டாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஓரியம் ஹென்றி ஒய்கெலோ ஆகியோருக்கும் இடையிலும் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்புக்களில் இலங்கைக்கும் உகண்டாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் அதிகரிப்பது உள்ளிட்ட பரஸ்பர விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்புக்களில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உகண்டாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வி.கணநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறும் பொதுநலவாய அமைப்பின் சபாநாயாகர்களின் (CSPOC) 27வது மாநாட்டில் பங்கேற்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர் கடந்த ஜனவரி 03ஆம் திகதி உகண்டா சென்றிருந்தனர். இந்த மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் பங்கேற்கின்றனர். 1969 ஆம் ஆண்டு கனடாவின் அப்போதைய சபாநாயகர் லூசியன் லாமோரியக்ஸின் முயற்சியில் இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *