நடுவானில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த போது, அதே கதவு அப்படியே பெயர்ந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 174 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் பறந்து கொண்டிருந்த போது, அதன் கதவு ஒன்று அப்படியே பெயர்த்துக் கொண்டு பறந்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் போர்ட்லேண்ட் ஏர்போர்ட்டில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. நடுவானில் அந்த கதவு பறந்த நிலையில், அருகே இருந்த இருக்கை ஒன்றும் பறந்துள்ளது.
அதேநேரம் இந்த விபத்தில் யாராவது காயமடைந்தார்களா என்பது குறித்து உறுதியாக எந்தவொரு தகவலும் இல்லை. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விமானத்தின் பின்புற மிட் கேபின் கதவு சுவருடன் அப்படியே பெயர்ந்துள்ளது தெரிகிறது.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-9 மேக்ஸ் என்ற மாடலில் இந்த விபத்து நடந்துள்ளது.
விமானம் ஒன்ராறியோவுக்கு புறப்பட்ட நிலையில், கொஞ்ச நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு கருதி விமானம் மீண்டும் போர்ட்லேண்டில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானம் 16,000 அடி உயரத்திற்குச் சென்றுள்ளது. அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. பிறகு விமானம் உடனடியாக கீழே இறங்கத் தொடங்கியதை டேட்டா தரவுகள் காட்டுகிறது.
இந்தச் சம்பவத்தால் விமானத்தில் பயணித்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து 22 வயதான பயணி ஒருவர் கூறுகையில், “எல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது. நான் கண்களைத் திறந்து பார்க்கும் போது எனக்கு முன்னால் ஆக்சிஜன் மாஸ்க்குகள் தான் இருந்தது. விமானத்தின் பக்கவாட்டில் சிறு பகுதியே மாயமாகி இருந்தது. அனைவரும் சாகப் போகிறோம் என்றே முதலில் நினைத்தேன். நல்வாய்ப்பாக விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கினர்” என்றார்.