இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் துபாயில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், சென்னை திரும்பி உள்ளார். சென்னை திரும்பிய அவர், இன்று விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்துக்கு Post Opperative Care சரியா நடந்துச்சா? என கேள்வியை எழுப்பி உள்ளார். மேலும், விஜயகாந்த் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்திருக்க வேண்டியவர் என்றும் கூறியுள்ளார்.
1981ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படத்தில் விஜயகாந்தை ஹீரோவாக வைத்து படம் இயக்கிய எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. அதே ஆண்டு நீதி பிழைத்தது எனும் இன்னொரு படத்தையும் அவர் விஜயகாந்தை வைத்தே இயக்கினார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நல்ல நட்பு தொடர்ந்து பல படங்களில் இருவரையும் இணைந்து பணியாற்ற வைத்தது.
எம்ஜிஆர் எப்படி தனது படங்களிலும் பாடல்களிலும் புரட்சி கருத்துக்களை வைத்தாரோ, அதே போலவே விஜயகாந்த் படங்களிலும் அதிகமான புரட்சிக் கருத்துக்கள் இடம்பெற்றன. பட்டணத்து ராஜாக்கள், ஓம் சக்தி, சாட்சி, வெற்றி, வீட்டுக்கு ஒரு கண்ணகி, குடும்பம், புது யுகம், எனக்கு நானே நீதிபதி, வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, ராஜநடை, செந்தூரப்பாண்டி, பெரியண்ணா வரை பல படங்களை இயக்கி உள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போதே அவரை சந்தித்து கட்டித் தழுவ நினைத்தேன். கடைசியாக அவரை சந்தித்த போது எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையிலும் என்னை கட்டிப்பிடிக்க முடியாமல் தவித்தார் எனக் கூறியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
விஜயகாந்த் மறைவால் ரொம்பவே மனசு உடைஞ்சு போயிருக்கேன். என்னால பேசவே முடியல என ஆரம்பித்த எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்த் உடன் தான் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் ரீலில் மட்டுமல்ல நிஜத்திலும் அவர் ரியல் ஹீரோ. தப்பு நடந்தா பார்த்துக்கிட்டு போக மாட்டார் இறங்கிப் போய் தட்டிக் கேட்பார் என்றார். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போதே ஒரு 10 வருஷத்தில் மூன்றாவது தேர்தலில் அவர் முதலமைச்சர் ஆகி விடுவார் என நினைத்தேன். ஆனால், அது முடியாமல் போய் விட்டது என உருக்கத்துடன் பேசினார்.
2016ல் என நினைக்கிறேன். அப்போது தான் முதல் முறை விஜயகாந்துக்கு பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் செய்ய வேண்டிய Post Opperative Care சரியா நடந்துச்சான்னு தெரியல.. இந்த நேரத்தில் இதையெல்லாம் பேசக் கூடாது.. ஆனால், என்னால் சொல்லாமலும் இருக்க முடியல.. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான ஓய்வு அவருக்கு கிடைத்திருக்க வேண்டும். மனுஷன் இப்படி கஷ்டப்பட்டு இறக்கக் கூடிய ஆளோ, அப்படி நொடிஞ்சு போகக் கூடிய நபரோ கிடையாது என விஜயகாந்த் மரணம் குறித்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர்.