2023.06.30 இல் பெறவேண்டிய நிலுவை வரி வருமானம் 943 பில்லியன் ரூபாய்
வரி செலுத்த வேண்டும் என அடையாளம் காணப்பட்ட வரி செலுத்துவோர் கூட வரி செலுத்தியில்லை
தற்போதுள்ள சட்டங்களின்படி, 15 ஆண்டுகளுக்கு வரி ஏய்ப்பு செய்யலாம்
தற்போதுள்ள சட்டத்தைத் திருத்துவதற்கு உடனடி நடவடிக்கை
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதற்கமைய, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல தடவைகள் குழுவின் முன் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டதுடன் அங்கு பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டதாகத் தெரிவித்தார். எந்தவொரு நபரும் 15 வருடங்கள் வரி செலுத்தாமல் இருக்க முடியும் என்றும் தலைவர் மேலும் விளக்கினார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குத் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் வரிக் கோப்பினை மதிப்பிடுவதற்கு 30 மாதங்களும் மேன்முறையீடுகளை பரிசீலிப்பதற்கு மேலும் 24 மாதங்களும் உள்ளன. அதன்படி 54 மாதங்களுக்கும் மேலாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரிக் கோப்பு உள்ளது எனவும் அதன் பின்னர் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் முறையிட்டதன் பின்னர் சட்டத்தின் பிரகாரம் 2 வருடங்கள் அவகாசம் வழங்கப்பட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். அதன்பிறகு, மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும், இதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள், 2023.06.30 வரை நிலுவையில் உள்ள வரி வருமானம் 943 பில்லியன் ரூபா எனவும், பல்வேறு காரணங்களால் அறவிட முடியாத தொகை 767 பில்லியன் ரூபா எனவும், அறவிடக்கூடிய தொகை 175 பில்லியன் ரூபா எனவும் தெரிவித்தனர். அத்துடன், இவ்வருடம் 37 பில்லியன் ரூபா வரி நிலுவை அறவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் விளக்கமளித்தனர்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வரி அறிக்கை கிடைத்தவுடன் இடம்பெறும் செயன்முறையை விளக்கிய அதிகாரிகள், வரி அறிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரி RAMIS அமைப்பில் தகவல்களை உள்ளிட்டு சிக்கல்களை அடையாளம் கண்டு, பின்னர் ஒரு கணக்காய்வு நடத்தப்படும் எனவும் சில சந்தர்ப்பங்களில் சில தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்காக மேலதிக தகவல்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுட்டிக்காட்டினர். அவ்வாறு தகவல்கள் கோரப்படும் சந்தர்ப்பங்களில், பெரும்பாலும் செலுத்துவோர் வேண்டுமென்றே தகவல்களைத் தாமதப்படுத்துவதாகவும் அதிகாரிகள் குழுல் சுட்டிக்காட்டினர்.
வரி அறிக்கையை அதிகாரி கணக்காய்வு செய்ய தற்போதுள்ள சட்டத்தில் 30 மாதங்கள் உள்ளதாகவும், அதன் பின்னர் ஆணையாளர் நாயகத்துக்கு மேன்முறையீடு செய்த பின்னர் மேன்முறையீட்டை விசாரணை செய்வதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். ஆணையாளருக்கு மேன்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காகாகக் காணப்படும் இரண்டு (02) வருடங்கள் அதிகமானது எனவும் அதனை ஆறு (06) மாதங்களாக குறைப்பது பொருத்தமானது எனவும் இங்கு குழு தெரிவித்தது. எவ்வாறாயினும், 06 மாதங்களுக்குள் தீர்மானம் வழங்கப்படாவிடின், மதிப்பீட்டுத் தொகையில் மாற்றம் ஏற்படாது என்று கருத வேண்டும் என நீதி அமைச்சர் இங்கு தெரிவித்தார். எனவே, வரி செலுத்துவோர் வரி ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்வதாக இருந்தால் மதிப்பிடப்பட்ட தொகையில் குறைந்தபட்சம் 50% ஐ செலுத்த வேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று இங்கு பரிந்துரைக்கப்பட்டது.
வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவிற்கு மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்வதற்கு 270 நாட்கள் அவகாசம் உள்ளதாகவும், அதற்கு சில கால அவகாசம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் மதிப்பீட்டுத் தொகை அல்லது கணக்கீடுகள் பற்றிய பிரச்சினைகள் மாத்திரமே பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும், அடிப்படைப் விடயங்களில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இதன்போது குழு தீர்மானித்தது.
தற்போது சட்டத்திலுள்ள மதிப்பீட்டிற்கான 30 மாத காலத்தை ஒரு வருடமாகக் குறைப்பது பொருத்தமானது என்று குழுவின் கருத்தாக இருந்தது. 30 மாத காலத்தை அப்படியே வைத்திருப்பதற்கும், ஆனால் தேவையான சந்தர்ப்பங்களில் வர்த்தமானி மூலம் காலத்தை மாற்றுவதற்குத் தேவையான அதிகாரத்தை சட்டத்தின் மூலம் நிதி அமைச்சருக்கு வழங்குவதே பொருத்தமானது என நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் குழு தீர்மானித்தது.
அதற்கமைய, ஆணையாளர் நாயகத்துக்கு வரி மேன்முறையீடு கிடைக்கப்பெற்ற பின்னர், அவரது உத்தரவை 6 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், இல்லை என்றால், முதற்கட்ட மதிப்பீடே இறுதியானது மற்றும் நிரந்தரமானது என்று கருதப்படுவதாக சட்டத்தில் திருத்தமாக சேர்க்க முன்மொழியப்பட்டது. அதற்கமைய, வரி செலுத்துவோர் அந்தத் தீர்மானத்தை ஏற்கவில்லை என்றால், ஒரு மாதத்துக்குள் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்ய முடியும். வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு ஆறு (06) மாதங்களுக்குள் தனது முடிவை வழங்க வேண்டும் மற்றும் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவிற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் மதிப்பிடப்பட்ட தொகையின் தற்போதைய கணக்கீடுகளை விசாரிக்க மாத்திரமே அதிகாரம் இருக்கும். ஏனைய அடிப்படை ஆட்சேபனைகள் அதாவது சட்டத்தில் பிரச்சினைகள் காணப்படுமானால் அதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படலாம். மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும், அதாவது, மேன்முறையீடு ஒரு வருடத்திற்குள் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்றும் இங்கு முன்மொழியப்பட்டது.
அத்துடன், வரி மேன்முறையீடுகளை விசாரிப்பதற்காக நீதிக் கட்டமைப்பிற்குள் விசேட நீதிமன்ற வளாகத்தை நிறுவவும் நீதி அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.
இந்தக் லந்துரையாடலில் எழுந்த விடயங்களை உள்ளடக்கி உள்நாட்டு இறைவரி திணைக்கள சட்டத் திருத்தத்துக்கான வரைபை கெளரவ சட்டமா அதிபர் மற்றும் சட்ட வரைஞரரினால் தயாரிப்பதற்கும் அந்த திருத்தத்தைத் தயாரித்த பின்னர் எதிர்வரும் தினமொன்றில் பாராளுமன்றத்தில் கூடி மீண்டும் கலந்துரையாடுவதற்கும் குழு தீர்மானித்தது