தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சாந்தீப் ஜோகிபர்த்தி. இவரது மனைவி கவிதா கோபு. இருவரும் பொறியியல் பட்டம் படித்துவிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வேலை பார்த்து வந்தனர்.
சாந்தீப் ஜோகிபர்த்திக்கு சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு திரும்பி சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இதே ஐடியா கவிதா கோபுவுக்கும் இருந்தது. இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் வேலை பார்த்த பின்னர் தங்களது கனவை நனவாக்குவதற்காக ராஜிநாமா செய்துவிட்டு ஹைதராபாத்துக்கு 2019 ஆம் ஆண்டு திரும்பினர்.
அதன்பின்னர் சுமார் 6 மாதங்களுக்கு சாந்தீப் நாடு முழுவதும் பயணம் செய்து தொழில்வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்தார். மார்க்கெட்டில் மக்களுக்கு என்னத் தேவைப்படுகிறது, டிமாண்டுக்கும் சப்ளைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து டீடெய்லாக அறிந்து கொண்டு அதில் தேர்வு செய்த தொழில்களை ஷார்ட் லிஸ்ட் செய்தார்.
இதில் ஃபுட், ஹெல்த் செக்மெண்ட் ஆகிய இரண்டுதான் பிரதானமாக சாந்தீப்புக்கு தெரிந்தது. இது பற்றி அவர் கூறுகையில் ‘கல்லூரிக் காலத்தில் எனக்கு சொத்தைப் பல் இருந்தது. அது மனசுக்குள் குறுகுறுத்ததால் இனிப்பு தவிர வேறு ஆரோக்கியமான விஷயம் இருக்கிறதா என்று யோசித்தேன். மார்க்கெட்டில் பலவிதமான எனர்ஜி பார், புரொட்டீன் பார் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பேரே தெரியாத பொருட்களில் தயாரிக்கப்பட்ட ஐட்டங்கள் இருந்தன. அதிக புரொட்டீன் நிறைந்த பார்கள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. இந்த பார்களை சாப்பிட்டால் வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற கோளாறுகள் ஏற்படலாம்.
இந்திய மக்களிடையே எனர்ஜி பார் அவ்வளவு பாப்புலராக இல்லை. சில ஃபிட்னஸ் விரும்பிகள் மட்டுமே அதை ரெகுலராக சாப்பிடுகின்றனர். இதனால் இனிப்பு வேண்டுபவர்களை திருப்திப்படுத்தும் அதேவேளையில் அந்த தயாரிப்பு ஆரோக்கியத்தை தருவதாகவும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்’ என்றார்.
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் லட்டு பாக்ஸ் (Laddu Box) என்ற நிறுவனத்தை சாந்தீப்பும் கவிதாவும் தொடங்கிய சில நாட்களிலேயே கோவிட் தொற்றுநோய் தாக்குதல் வந்து விட்டது. இந்த நிலைமையில் தங்கள் ஸ்டார்ட்அப்பை நடத்துவதற்கு ரெகுலரான வருமானம் இல்லாமல் அவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
தொடக்கத்தில் நான்கு ஐட்டங்களுடன் தயாரித்து விற்ற லட்டு பாக்ஸ் இப்போது மல்டிகிரெய்ன் லட்டு, சிறுதானிய லட்டுகள், பாசிப்பருப்பு லட்டு, ஆளி விதை லட்டு, உலர் பழங்கள் லட்டு, நிலக்கடலை லட்டு உள்பட 15 வகையான ஆப்ஷன்களைத் தருகிறது.
லட்டு பாக்ஸின் 2023 ஆம் ஆண்டின் வருடாந்திர டர்ன்ஓவர் ரூ.2 கோடி ஆகும். 2025 ஆம் ஆண்டுக்குள் பெங்களூரு, ஹைதராபாத், புணே, மும்பை, தில்லி என்சிஆர் பகுதிகளில் 100 கடைகளை திறக்க லட்டு பாக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
லட்டு பாக்ஸ் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் நாடுமுழுவதுமாக, B2B சேனல்கள் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டோர் ஆகிய மூன்று வழிகளில் சப்ளை செய்கிறது. ஆன்லைன் டெலிவரி நிறுவனமான சோமாட்டோ மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசின் ‘Feeding India’ என்ற ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் நலிவடைந்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சிறுதானிய லட்டுகளை வழங்குவதற்கான வர்த்தக ஒப்பந்தத்தை லட்டு பாக்ஸ் செய்து கொண்டுள்ளது.