இந்தியாவில் திறந்து வைக்கப்பட்ட திருச்சி விமான நிலையம் பற்றிய தகவல்கள்
ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரத்தை பறைசாற்றும் திருச்சி விமான நிலைய பயணிகள் முனையம் திறந்துவைப்பு.
இந்தியாவின் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய ரூ.951 கோடியில் கட்டப்பட்ட பயணிகள் முனையம் இன்றைய தினம் (02) காலை பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே சமயத்தில் 4,000 சர்வ தேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும்.
இந்த புதிய பயணிகள் முனையத்தின் சிறப்பாக இந்தியாவின் தமிழ் கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பார்ப்போர் கண்களை கவரும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது . அத்துடன் உள்செல்லும் வெளியேறும் வாயில்களிலும் இந்து ஆலய கோபுர முகப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன
உள்ளே சுவரில் நடராஜர் சிற்பங்கள் , இந்து கடவுள்களின் படங்களும் வரையப்பட்டுள்ளதுடன் பிரமான்ட திரையில் ஆலய தேர் கலாசார நடனங்களும் உள்ளன.
இதேபோல, வருகை, புறப்பாடு , பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
புதிய முனையத்தின் உள்ளே புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
இந்த முனையத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமானநிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.