புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது நாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள பொதுப் பொறுப்புக்களை குறையின்றி நிறைவேற்ற ஒன்றிணைவோம் – புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு.
வரையறுக்கப்பட்ட வளங்களுடன் கடந்த வருடத்தில் பாராளுமன்ற அமர்வு வாரமொன்றில் 70 குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன – பணியாட் தொகுதியினருக்கு நன்றி தெரிவித்து செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
புதிய நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது நாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள பொதுப் பொறுப்புக்களைக் குறையின்றி நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற புதிய வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் தெரிவித்தார்.
எதிர்பாரா தருணத்தில் முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்ட இக்கட்டான காலகட்டத்தைக் கடத்து செல்லும் பயணத்தில் பாராளுமன்றத்தின் மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளின் பணியாளர்கள் அனைவரும் நாட்டுக்காக விசேட பொறுப்புக்களை ஆற்றவேண்டியிருப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டிற்கான பணிகளை ஆரம்பிக்கும் எளிமையான நிகழ்வில் பாராளுமன்ற பணியாளர்கள் அரசாங்க சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, 2023 ஆம் ஆண்டு பாராளுமன்றம் 105 நாட்கள் கூடியதாகக் குறிப்பிட்டார். தற்பொழுது 91 குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு பாராளுமன்ற அமர்வு வாரமொன்றில் சராசரியாக 70 குழுக் கூட்டங்களை நடத்த முடிந்திருப்பதாகவும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த வருடத்தில் பாராளுமன்றம் தொடர்பில் அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும் சபை அமர்வுகளைப் பார்வையிடுவதற்கும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்திருப்பதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தைப் பொது மக்களுக்கு நெருக்கமாக்கும் நோக்கில் நிறுவனத்துக்கு வெளியே பாராளுமன்றம் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் 50ற்கும் அதிகமான செயலமர்வுகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த வருடத்தில் 150ற்கும் அதிகமான வெளிநாட்டுத் தூதுக் குழுக்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாராளுமன்றப் பணியாளர்கள் மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளின் பணியாளர்களுக்கும் செயலாளர் நாயகம் நன்றி தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளில் முறையான பாதுகாப்பை வழங்குவதன் மூலம் பங்களித்த பொலிஸார் உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அவர் நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் மற்றும் இணைந்த சேவைகளின் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.