மலையக மக்களைக் கௌரவித்து இந்தியா வெளியிடும் முதல் முத்திரை

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமது உரிமைகளை வென்றெடுக்கவும் கௌரவமானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கும், பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.

எமது மலையக மக்களுக்கான அங்கீகாரம் என்பது, இன்றைய சூழ்நிலையில் மாபெரும் தேவையாகவே காணப்படுகின்றது.  

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டிலும், நம் மலையக மக்களைக் கௌரவிக்கும் வகையில், இந்திய தபால்துறை அமைச்சினூடாக முத்திரையொன்று வெளியிடப்பட்டு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். 

புதுடில்லியில், இம்மாதம் 30 ஆம் திகதியன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வின்போது, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நடா அவர்களால், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களிடம் முதல் முத்திரை கையளிக்கப்படவுள்ளது. 

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு, இந்தியத் தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதன்மூலம், இலங்கைக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பிலான வரலாறு, இந்தியர்களுக்கு எளிதில் எடுத்துரைக்கப்படுகிறது. 

இவ்வாறு வெளியிடப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்திரையை, உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பைப் கொண்டுள்ள இந்தியாவின் 155,015 க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களிலிருந்து, எதிர்வரும் 30 ஆம் திகதிக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், சீனா, ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பூட்டான் உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் 32,285,425க்கும் அதிகமான இந்திய வம்சாவளி மக்கள் வசித்து வருகின்றனர். இவ்வாறிருக்கையில், அந்த நாடுகளிலிருக்கும் மக்களுக்கு கிடைக்காத அங்கீகாரமொன்று, இலங்கையில் 200 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு கிடைத்திருப்பது, நம் மக்களுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது. 

உதவி, கடமை, பொறுப்புணர்வு என்ற எண்ணப்பாடுகளுக்கு அப்பால், நம் மக்களை நாம் தான் கௌரவிக்க வேண்டும், அவர்களுக்கு நாம் தான் அங்கீகாரமளிக்க வேண்டுமென்ற தொனியில், இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக முத்திரையொன்று வெளியிடப்படுவது, இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் நட்புறவைப் பறைசாற்றி நிற்பதோடு, மலையக மக்களால் இலங்கைக்கும் கௌரவம் கிடைத்திருக்கிறது.  

இவ்வாறானதொரு கௌரவிப்பு நிகழ்வில்,  கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் முதல் முத்திரையைக் கையளிக்க நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *