விகேஆர் 1926ல் ஜனவரி ஒன்றாம் தேதி பிறந்தார். அவரது பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். நடிகர் ஆகவேண்டும் என்பது அவரின் கனவு. தனது கனவை நிறைவேற்றிக் கொண்டாலும் கூட, அந்த சினிமா மூலமாக நிறைய பணம் சம்பாதிக்க முடியாமல் வாழ்க்கையை ஒருவாறு கஷ்டமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் சரிசமமாக நடத்தி வந்தார். நிறைய தமிழ்ப் படங்களில் விகே ராமசாமி நடித்துள்ளார். நல்ல குணச்சித்திர நடிகர் என பெயர் எடுத்தார். தனக்கு கிடைக்கும் கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு நல்ல நடிகர் என்று பெயர் எடுத்து விடுவார் விகேஆர். இப்படியே அவரது சினிமா வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. அதன் பிறகு ரஜினியுடனும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது ரஜினியுடன் நல்ல நட்பு ஏற்பட்டது அவருக்கு. ரஜினியை எங்கு பார்த்தாலும் இவரும் தம்பி தம்பி என்று நட்புறவோடு பழகுவார். அதே போல ரஜினிகாந்தும் இவர் மீது தனி பிரியம் வைத்திருந்தார்.
விகேஆர் ஒரு காலகட்டத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். இந்த தகவல் எப்படியோ ரஜினிகாந்தின் காதுகளுக்கும் சென்றது. இந்த நல்ல மனிதருக்கா இந்த நிலைமை என்று வருத்தப்பட்டார் ரஜினி. அதற்கு முன்னதாக இருவரும் சந்தித்த போது இந்த கடன் தொல்லை பற்றி எந்த ஒரு இடத்திலும் விகே ராமசாமி ரஜினியிடம் சொல்லவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்லியிருந்தார். எனக்கு ஒரு படம் பண்ணிக்குடுங்க என்று கேட்டிருந்தார். ரஜினிக்கு அப்போது தான் அந்த விஷயம் நியாபகத்துக்கு வந்தது. அப்போதே சீக்கிரமாக ஒரு படம் இவருக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் ரஜினிகாந்த். அதன் பிறகு விகேஆருக்கே தெரியாமல் தான் அந்த ஆச்சரியம் நடந்தது. ஆச்சரியம் தானாக நடக்கவில்லை. நடத்திக்காட்டினார் சூப்பர்ஸ்டார்.
ஒரு நாள் ஒரு பிரபல பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியானது. அதில் என்ன குறிப்பிட்டிருந்தது என்றால், ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார். அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. என்று குறிப்பிட்டு விகேஆர் உட்பட எட்டு தயாரிப்பாளர்கள் பெயர் அதில் இடம் பெற்றிருந்தது. தன் பெயரும் இடம் பெற்றுள்ளதை பார்த்த விகே ராமசாமிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆனால் கூடவே ஒரு சோகமும் அவரை ஆட்கொண்டு விட்டது. இப்போது நாம இந்த அளவுக்கு கடனாளியாக இருக்கிறோம். இந்த நிலையில் எப்படி ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்க முடியும்? எப்படி பணத்தை ஏற்பாடு செய்வது என்ற யோசித்துக்கொண்டிருந்தார் விகேஆர். அதன் பிறகு தான் அவருக்கு இன்னொரு விஷயமும் தோன்றியது. பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.
அருணாசலம் படத்தின் எட்டு தயாரிப்பாளர்கள்!
ஆனால் இது உண்மை தானா என்று தெரியவேண்டும் அல்லவா? எதற்கும் ரஜினியிடமே போன் செய்து கேட்டுவிடலாம் என்று நினைத்த போது அவரது போன் சினுங்கியது. எடுத்து பேசினார். மறுமுனையில் பேசியது ரஜினிகாந்த் தான். என்ன தம்பி எப்படி இருக்கீங்க என்று விகேஆர் கேட்க, உங்க ஆசிர்வாதத்தால நன்றாக இருக்கிறேன் என்று ரஜினி சொன்னதைக்கேட்டு விகேஆரின் கண்கள் ஈரமானது. அடுத்து தழுதழுத்த குரலில் என்ன தம்பி பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன் என்று சொல்லும்போதே, ஆமாம் அதைப்பற்றி பேசுவதற்காக தான் இப்போது அழைத்தேன் என்று ரஜினி கூறினார். மேலும் இந்த தயாரிப்பு செலவு பற்றி ராமசாமி கேட்டபோது, அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதற்கும் கவலை பட வேண்டாம். உங்களிடம் இந்த தகவலை சொல்லதான் நான் அழைத்தேன். மற்றபடி பணவிஷயத்துக்காக அல்ல என்று கூறி போனை வைத்து விட்டார் ரஜினிகாந்த்.
விகேஆருக்கு ரொம்ப சந்தோஷம். நமது நிலைமையை புரிந்து கொண்டுதான் தம்பி இப்படி செஞ்சிருக்கார் என்று ஆனந்தமானார். அந்த படம் தான் அருணாச்சலம். அந்த படத்தின் எட்டு தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் விகேஆர். ரஜினி என்ன முடிவு செய்திருந்தார் என்றால் இந்த சினிமா துறையில் மிகவும் கஷ்டப்படும் எட்டு தயாரிப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்காக இந்த அருணாச்சலம் படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்து தான் இந்த படத்தை உருவாக்கினார் ரஜினிகாந்த். அதுவும் தயாரிப்பாளர்கள் என்றால் படம் தயாரிப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும். ஆனால் ரஜினியோ அந்த எட்டு நபர்களிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அவரே அனைத்து தொகையையும் செலுத்தி அருணாச்சலம் படத்தை எடுத்தார். இந்த படம் நல்ல வசூலை குவித்தது. அந்த படத்தின் மூலமாக வந்த பெரும் தொகையை அந்த எட்டு தயாரிப்பாளர்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்தார் ரஜினிகாந்த்.
அப்போது தான் விகே ராமசாமிக்கும் ஒரு தொகையை ரஜினி கொடுத்தார். இதனால் தான் விகேஆரின் கடன் தொல்லை தீர்ந்தது. அது மட்டுமல்லாமல் அருணாச்சலம் படத்தில் விகேஆரும் நடித்திருப்பார். வில்லன் கதாபாத்திரமாக அவர் நடித்திருந்தார். அதற்காக அவருக்கு போன் செய்த ரஜினி, இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் இருக்கு. நடிக்கிறீங்களா என்று கேட்டுள்ளார். அதற்கு விகே ராமசாமியோ என்ன தம்பி இப்படி கேக்குறீங்க. நடி என்று சொன்னால் நடிக்க போறேன். இது என்ன கேள்வி என்று கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் அந்த அருணாச்சலம் படத்தில் விகேஆர் நடித்தார். தயாரிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுத்த ரஜினிகாந்த், அதோடு நிறுத்தாமல் அவர் அந்த படத்தில் நடித்ததற்காக ஒரு பெரும் தொகையையும் வழங்கினார்.
ரஜினி பற்றி விகே ராமசாமி!
இதனால் விகேஆர் பிரச்சனைகள் அனைத்துமே தீர்ந்து விட்டது. அதோடு மட்டுமல்ல, அவரின் கடைசிகால வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கவும் அந்த பணம் பெரிதும் உதவியது. ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு இது மிகுந்த ஆறுதலை கொடுத்தது. கடனால் கூனிக்குறுகி இருந்த விகேஆர் தலை நிமிர்ந்து நடக்க ரஜினி உதவியுள்ளார். இந்த விஷயங்களை பற்றி விகே ராமசாமியே நிறைய பேட்டியில் கூறியுள்ளார். பத்திரிகை பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பல இடங்களில் இது பற்றி பேசியுள்ளார் நமது விகே இராமசாமி. அவர் அப்படி ரஜினியை பற்றி என்ன பேசினார் என்பதின் தொகுப்பை இனி நீங்கள் படிக்கலாம்.
நான் ரொம்பவே சிரமப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு உதவிய ஒரே நல்ல உள்ளம் என்றால் அது ரஜினி தம்பி தான். ரொம்பவே நல்ல மனிதர். பழகுவதற்கு எளிமையாக இருப்பார். முக்கியமாக நல்லா வாழ்ந்தவர்கள் கெடக்கூடாது என்று நினைப்பார். எனக்கு முதல் பிறவி கொடுத்தது கடவுள். மறுபிறவி கொடுத்தது சூப்பர்ஸ்டார். என் சிரமத்தை போக்க ரஜினி தம்பி எவ்வளவோ உதவிகள் செய்துள்ளார். ஒரு நாள் பேப்பர் படித்துக் கொண்டிருந்த போது ஒரு செய்தியை பார்த்தேன். அருணாச்சலம் படத்தின் தயாரிப்பாளர்களில் என் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆச்சரியம் அடைந்தேன். அதன் பிறகு ரஜினியே போன் செய்து என் ஆச்சரியத்துக்கு விடையளித்தார்.
அருணாசலம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக என் பெயர் இருந்ததே தவிர, நான் இந்த படத்திற்காக ஒரு பைசா கூட தரவில்லை. எல்லா பணத்தையும் ரஜினியே போட்டுவிட்டு அந்த படத்தின் மூலமாக வந்த லாபத்தை எங்களுக்கு பங்கிட்டு கொடுத்தார். அது மட்டுமல்லாது அந்த படத்தில் நான் நடித்திருந்தேன் அல்லவா? அதற்காகவும் ஒரு பெரிய தொகையை எனக்கு சம்பளமாக கொடுத்தார். அதனால் தான் என் கஷ்டங்கள் அனைத்துமே தீர்ந்தது. நான் கடைசிக்காலத்தில் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இந்த பணம் பெரிதும் உதவியது. ரஜினி தம்பி எனக்கு செய்த உதவிகளை நான் இந்த ஜென்மத்தில் மறக்கமாட்டேன். அப்படி மறந்தால் நான் நன்றி மறந்தவன் ஆகிவிடுவேன்.
இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது!
இதில் இன்னொரு விஷயம் கவனித்து பார்த்தால், நான் ஏதுமே செய்யாமல் தான் எனக்கு ரஜினிகாந்த் இந்த உதவியை செய்திருக்கிறார். ஆனால் சும்மா கொடுத்தால் எனது கவுரவத்திற்கு குறைச்சல் வந்துவிடும் என்பதால் என்னை தயாரிப்பாளராக்கி எனக்கு உதவியுள்ளார் சூப்பர்ஸ்டார். அவரை என் வீட்டு பூஜை அறையில் வைத்திருக்கிறேன். இப்படிப்பட்ட மகானை கடவுளுக்கு நிகரானவரை எனது பூஜை அறையில் வைப்பதில் தவறேதும் இல்லை அல்லவா? ஆரம்ப காலத்தில் எனது நெஞ்சில் எம்ஜிஆருக்கு மட்டுமே இடம் இருந்தது. ஆனால் இப்போது அந்த இடம் ரஜினி தம்பிக்காகவும் இருக்கிறது. பாத்திரம் அறிந்து போடு என்று சொல்வார்கள். என் கதாபாத்திரம் அறிந்து ரஜினி உதவி செய்திருக்கிறார் என்று ஒரு புன்னகை செய்கிறார் விகேஆர்.
விகே ராமசாமிக்கு மட்டுமல்ல, அந்த மீதமுள்ள ஏழு தயாரிப்பாளர்களுக்கும் ரஜினிகாந்த் அந்த அருணாச்சலம் படத்தின் லாபத்தை பகிர்ந்து அளித்துள்ளார். அதில் கலைஞானமும் ஒருவர். அவருக்கு சமீபத்தில் ஒரு கோடி மதிப்பிலான வீடு ஒன்றை இலவசமாக வழங்கினார் ரஜினி. இதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கலைஞானமும் சூப்பர்ஸ்டாரைப் பற்றி நிறைய இடங்களில் பேசியிருக்கிறார். அவரின் நல்ல மனது யாருக்கும் வராது என்றும் கூறியிருக்கிறார். நான் இப்போது இங்கே எழுதியிருப்பது அருணாச்சலம் படத்தின் மூலமாக ரஜினிகாந்த் செய்த உதவியை பற்றி மட்டும் தான். இது போல நிறைய உதவிகளை ரஜினி செய்திருக்கிறார்.
ஆனால் ரஜினியிடம் இருக்கும் மிகப்பெரிய நல்ல குணம் எது என்று கேட்டால் உதவி செய்வது தான். உதவி செய்வது கூட பெரிய விஷயம் அல்ல. ஆனால் செய்த உதவியை வெளியே சொல்லிக்கொள்ளவில்லை என்றால் இங்கு பலருக்கு தூக்கமே வராது. ஆனால் ரஜினியோ, வலது கரம் கொடுப்பது இடது கரத்துக்கு தெரியக்கூடாது என்ற பழமொழிக்கேற்ப தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இப்போதுள்ளவர்கள் ஐநூறு ரூபாய்க்கு உதவி செய்தால் ஐயாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் செய்வார்கள், அது வெளியில் தெரிவதற்காக. நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஒரு டியூப் லைட்டை தானமாக கொடுத்தால் கூட, உபயம் என்று அந்த லைட் முழுவதும் அவர்கள் பெயரை எழுதி இருப்பார்கள். அவர்களின் பெயரைத் தாண்டி அந்த பல்பு வெளிச்சம் தரவேண்டும்.
இதை காமெடிக்காக சொல்லவில்லை. நிறையபேர் இதுபோலதான் இருக்கிறார்கள். உதவி செய்வதே விளம்பரத்திற்கு தான் என்று இருக்கும்போது, ரஜினிகாந்த் இந்த மாதிரி செயல்படுவது எல்லோருக்குமே ஆச்சரியம் தான். அதனால் தான் விகேஆர் தனது பூஜை அறையில் ரஜினிகாந்தின் படத்தை வைத்திருந்தார். இப்படிப்பட்ட மகானை கடவுளுக்கு நிகரானவரை பூஜை அறையில் தானே வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் விகேஆர். ரஜினிகாந்த் எந்த ஒரு இடத்திலும் நான் அவர்களுக்கு உதவி செய்தேன் என்று சொல்லிக்கொள்ளவில்லை. நான் தான் அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லவில்லை.
பாபா படம் பற்றி விகேஆர்!
இதுதான் ரஜினிகாந்த். இவருக்கு இருக்கும் மனது யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. எந்த உயரத்திற்கு சென்றாலும் மற்றவர்களுக்கு தரும் மரியாதை. அதன் பிறகு எல்லோருக்கும் உதவும் இந்த குணம் இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் நிறைய பேரிடம் பார்க்க முடியாது. அதனால் தான் ரஜினியை எல்லோருமே கொண்டாடுகிறார்கள். அவரது சினிமா நடிப்பை மட்டும் ரசிக்காமல் அவரது நிஜ வாழ்க்கையையும் ரசிக்கிறார்கள். இந்த பாக்கியம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. அது போல் அனைவருமே ரஜினி மீது அன்பாக இருப்பார்கள்.
இது போலதான் பாபா படம் சரியாக வியாபாரம் ஆகவில்லை. அந்த சமயத்தில் விகே இராமசாமி பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு அப்போது தான் சற்று நலமடைந்து இருந்தார். அப்போது அவர் குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால், ரஜினிகாந்தின் பாபா ரொம்பவே நல்ல படம் தான். நல்ல கதை, ஆனால் இப்போது ஏனோ நல்ல கதைகள் எல்லாம் மக்களுக்கு பிடிக்க மாட்டிக்குது. ரஜினி தம்பியின் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லபடியாக தான் நடக்கும். இந்த படத்தால் அவரின் மதிப்பு கூடுமே தவிர, ஒருபோதும் குறையப்போவதில்லை என்று விகேஆர் குறிப்பிட்டார்.
விகேஆர் ஒரு தீர்க தரிசி என்றுதான் கூறவேண்டும். ரஜினி நடித்த படங்களிலே முக்கியமான படம் என்றால் அது பாபா தான். வியாபார ரீதியாக படம் தோற்றிருந்தாலும் ரசிகர்களின் மனதை வென்ற படம் தான் பாபா. ரஜினி ரசிகர்கள் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் கூட அவர்கள் காட்டும் முத்திரை பாபா முத்திரையாக தான் இருக்கும். சூப்பர்ஸ்டாரின் குணத்துக்கு எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்!