இந்திய மக்கள் மத்தியில் பிடித்தமான வெளிநாட்டு உணவுகளில் பர்கரும் முக்கியமான இடத்தில் காலம்காலமாக உள்ளது. மல்டிநேஷனல் கம்பெனிகளான பர்கர் கிங், மெக் டோனால்டு போன்ற பிராண்டு பர்கர்கள் மிகவும் அதிகமாக விற்கிறது. ஆனால் இதற்குப் போட்டியாக ஒரு பக்கா கிரில்டு பர்கர் வந்துவிட்டது.
பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை பார்த்து வந்த பிராஜா ரௌத் என்பவருக்கு பர்கர் என்றால் கொள்ளைப் பிரியம். எப்படியாவது ஒரு அசத்தலான இந்தியன் பிராண்டு பர்கரை தயாரித்து விற்க வேண்டும் என்ற ஐடியா ரொம்ப நாளாகவே அவரது மூளைக்குள் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.
தனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு கையில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை வைத்து சிறிய அளவில் பர்கர் தயாரிப்பு தொழிலைத் தொடங்கினார். தொடக்கத்தில் தான் வேலைபார்த்த இன்போசிஸ் நிறுவனத்தின் அருகிலேயே ரோட்டில் ஒரு கியாஸ்க் போட்டு பர்கரை விற்கத் தொடங்கினார். அவருடன் வேலை பார்த்தவர்கள், நண்பர்கள் என அவரது வாடிக்கையாளர்களானார்கள். அவர் தயாரித்த கிரில்டு பர்கரின் சுவை பிடித்துப் போக வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. நிறைய பார்சல்களும் சிட்டாகப் பறந்தன.
பிராஜா ரௌத் ஒரே சமயத்தில் அவர் இரண்டு மூன்று பர்கர்களை வாங்கிச் சாப்பிடுவார். அப்படிப்பட்டவருக்கு சுலையான பர்கரை தயாரிக்கவும் கைவந்த கலையாக இருந்தது.
மெக் டோனல்டு, கேஎப்சி, பர்கர் கிங் பிராண்டுகளுக்கு கடும் போட்டியை பெங்களூரில் ரௌத்தின் பர்கர் தந்தது. இதைத் தொடர்ந்து Biggies Burger என்ற பெயரில் புதிய கம்பெனியைத் தொடங்கினார். லோக்கல் மக்களுக்கு ஏற்ப வகை வகையான மூலப் பொருட்களை வைத்து அவர் தயாரித்த கிரில்டு பர்கருக்கு மக்களிடையே விரைவிலேயே ஆதரவு பெருகியது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது கடைக்கு நிறைய கஸ்டமர்கள் வந்து பர்கரை சுவைத்து செல்கின்றனர். இதனால் பிக்கீஸ் பர்கர் படிப்படியாக லாபத்தை அள்ளத் தொடங்கியது. 2023இல் பிக்கீஸ் பர்கர் நிறுவனத்தின் வருவாய் ரூ.100 கோடியானது.
சிறிய நகரங்களுக்கு தனது தொழிலை விரிவுபடுத்த ரௌத் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் வருடத்துக்கு ரூ.200 சம்பாதிக்க வேண்டும் என்பது தான் அவரது இலக்காக உள்ளது. இப்போது பிக்கீஸ் பர்கர் 14 மாநிலங்களில் உள்ள 28 நகரங்களில் 130 கிளைகளைத் தொடங்கியுள்ளது. இதுவரை 50 லட்சம் பர்கர்கள் விற்பனையாகியுள்ளது. இதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் 350 கிளைகள் வரை தொடங்க திட்டமிட்டுள்ளதாக ரௌத் கூறுகிறார். உணவுத் தொழிலை செய்ய விரும்புவோருக்கு பிராஜா ரௌத்தின் வெற்றி நிச்சயமாக ஒரு உத்வேகத்தைத் தரும் என நம்பலாம்.